நடேசன் நினைவேந்தல்:தகவல் திரட்டுகிறதாம் காவல்துறை!


யாழில் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தலை நடத்தியவர்களின் விபரங்கள் பொலிஸ், புலனாய்வு துறையினரால் சேகரிக்கப்பட்டிருப்பதாக யாழ் ஊடக அமையத்தின் செயலாளர் த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஊடக அமையத்தினுள் அத்துமீறி நுழைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நினைவேந்தலில் பங்கெடுத்த ஊடகவியலாளர்களின் விபரங்களை சேகரித்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன் , பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.இவ்வாறு ஊடக அமையத்திற்குள் நுழைந்த பொலிஸார் கொரோனா தொற்றை காரணம் காட்டி நிகழ்வை குழப்ப முற்படட போதும் அது பலன் அளிக்கவில்லை.

மேலும் வருகைதந்த பொலிஸாரில் சிலர் முகக்கவசங்கள் அணியாது வந்திருந்தமையை அவதானிக்க முடிந்ததாகவும் செயலாளர் த.பிரதீபன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments