ஏ-9 ஏரம்பு எழுதிய ''வலி சுமக்கும் நாட்கள். . .'' அனுபவப் பகிர்வு -1


(ஒக்ரோபர் 2008 இலிருந்து கிளிநொச்சியிருந்து முள்ளிவாய்க்கால்  இறுதிப் போர் வரை  வாழ்ந்தவரின் அனுபவப் பகிர்வு) 


உணர்வுகளை மொழிவது கடினம். அந்தக் கடினத்தையே கைவந்த கலையாகத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தத்தெரிந்தவன் கலைஞனாகி
விடுகிறான். அவ்வாறு தனக்குள் மட்டுமே அதுவரை குமுறிக்கொண்டிருந்த உணர்வுகளுக்கு பேசக்கற்றுக்கொடுத்து பிரசவித்துவிடுபவனுக்குத் தன்னளவில் ஓரளவு அமைதி கிடைக்கலாம். ஆனால், எழுதும் என்னிலையோ வேறு. இதமாகச் சுமக்கும் மரணவேதனைகளை எனக்கு இறக்கிவைக்கத் தெரியாது.


உள்ளுக்குள் மோதும் உணர்வுகளுக்கு மொழிவழி கொடுக்க முனையும்போதே திணறுகிறேன். எதைப் பதிவது?  எல்லாவற்றையும் பதிவதா?  எதைத் தவிர்ப்பது?  ஐயோ! இது என்னுடைய தனிப்பட்ட உணர்வல்லவே . . . எத்தனை உயிர்களின் காலங்காலமாய் காத்துவைத்த வாழ்வின் வலிகள்! இதில் தவிர்ப்பதற்கும் சேர்ப்பதற்கும் நான் யார்?

அன்பான உறவுகளே! 

சத்தியமாய் தெரியவில்லை . . எப்படி என் உணர்வுகளைப் பதிவதென்று. இழந்துபோன ஒவ்வோர் உயிரிலும் ஒவ்வொரு முறை மரணித்துப்போன மனதின் வலிகளை, அவ்வப்போதைய உணர்வுகளை பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். அரையுயிரும்  குற்றுயிருயாய் ஒடுக்கப்பட்ட ஆயிரமாயிரம் எம்முறவுகள் பட்ட அவல உச்சங்களை விறகாக்கி எம்முள்ளே எரியவேண்டிய அக்கினிச்சுவாலையை உயிருடன் பேணிவைத்திருப்போம். அழிப்பதற்காய் எம்மீது எதிரி மூட்டிய அதே தீயை ஒன்றாகச் சேர்த்து எரிமலை ஆவதும் எமக்கான பலமே என்பதில் உறுதியாய் இருப்போம்.

இலங்கையின் நெற்கிண்ணம் என்று போற்றப்பெற்ற வளஞ்செறிந்த மன்னார் கிளிநொச்சியின் புறநகர்ப்பகுதிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. சமாதானகாலம் பூசிய அரிதாரத்தைக் அப்பிக்கொண்டிருந்த திசைகள் மெல்லமெல்ல தமது சுயரூபத்தைக் காட்டத்தொடங்கியிருந்தன. தரைக்கு மேலே உயர்ந்த வீடுகளைவிட தரைக்குக்கீழே பலமான காப்பகழிகளிலேயே அதிகம் மக்கள் நாட்டம்கொண்டிருந்தனர்.

தினந்தோறும் மூன்று வேளைகளில் தொடங்கியது நாளடைவில் எல்லாப் பொழுதுமே குண்டுவீச்சுவிமானங்களின் தாக்குதல்களோடு கழியத்தொடங்கின. உள்நாட்டு யுத்தம் என்று உலகுக்குச் சொல்லிக்கொண்டு ஈராக் யுத்தத்தின்போது சதாம்குசைனின் படைகள் அமெரிக்காவிற்கு எதிராகப் பயன்படுத்திய அதே மிக் வகை விமானங்களைளே தமிழ்மக்களைப் பலியெடுக்கச் சிங்களம் ஈடுபடுத்தி வந்தன. இவை தவிர வண்டு என்று மக்களால் அழைக்கப்பட்ட ஆளில்லா வேவுவிமானங்களும் சதா வான்பரப்பில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இவற்றின் துணையுடன் பெறப்படும் படங்களிலே மரங்களால் மூடப்படாத வரையில் ஒரு வீட்டுமுற்றத்தில் எத்தனை பேர் கூடியிருக்கிறார்கள் என்ற அளவிற்குத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.


எனினும் எப்போதாவது போராளிகளின் முகாம் ஏதாவதொன்று போர்விமானங்களின் இலக்குக்கு உட்பட்டபோதிலும், தமிழ்மக்களின் இயல்புவாழ்க்கையைச் சீர்குலைத்து அச்சம் நிறைந்த ஒரு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்துவதே கொழும்பின் திட்டமாகத் தோன்றியது. அதனாலேயே பாடசாலைகள், வணிகநிலையங்கள், வைத்தியசாலைகள், நிர்வாகமையங்கள், பெருஞ்சந்திகள் என தமிழ்மக்கள் அதிகளவில் சூழும் இடங்கள் குறிவைக்கப்பட்டன.

பள்ளி, வேலையிடம், வீடு எனப் பிரிந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் குண்டுவீச்சு விமானங்கள் வரும்போது  மற்றவர்களின் பாடு எவ்வாறோ என நிம்மதி இழந்தவர்களாக இருந்தனர். எனினும் எல்லாவற்றுக்கும் முகங்கொடுக்கப் பழகியிருந்த எம்மக்கள்
பாடசாலைகள், கடைத்தெருக்கள், வைத்தியசாலைகள், சந்தைகள், நிர்வாகமையங்கள், பெருஞ்சந்திகள் என மக்கள் அதிகளவில் திரளும் எல்லாவிடங்களிலும் தமிழீழக்காவற்றுறையின் அயராத ஒத்துழைப்புடன் காப்பகழிகளை அமைத்தனர்.

அத்தோடு தெற்கிலுள்ள விமானத்தளத்திலிருந்து புறப்படும் மிகையொலிப்போர்விமானங்கள் செலவுசெய்யும் அதிகளவு எரிபொருள் காரணமாக ஆரம்பநாட்களில் வன்னிக்கு மேலாகப் பறப்பில் ஈடுபடக்கூடிய அவற்றின் அதிகபட்ச நேரம் சுமார் 20 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆதலால் காப்பகழிக்குள் இருப்பவர்கள் மணிக்கூட்டைப் பார்த்துக்கொண்டு 20 நிமிடத்தில் வெளியேவர விமானங்கள் திரும்புவது என்பது போர்க்கால யதார்த்தமாக இருந்தது.


இந்த நிலமையில்தான் மேற்கே மன்னார் மாவட்டத்திலிருந்தும் தெற்கே வவுனியா மாவட்டத்திலிருந்தும் இராணுவத்தின் தொடர்ச்சியான எறிகணைவீச்சுகளிற்கு அஞ்சி கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.

ஆனால், பன்னாடுகளின் பங்களிப்பில் போர்த்தளபாடங்களுக்குப் பஞ்சமில்லாத சிங்களத்தின் எறிகணைகளும் போர்விமானங்களின் குண்டுவீச்சுகளும் ஆக்கிரமிப்புப்படைகளின் முன்கனர்வைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருந்தன. இதனால் கிளிநொச்சிப்பகுதியும் எறிகணை வீச்செல்லைக்குள் வந்தது.

குண்டுவீச்சு விமானங்களின் வருகையின்போது மட்டும் அவற்றின் அதிகபட்ச பறப்புநேரத்தைக் கணக்கில்வைத்து காப்புத்தேடிய மக்கள், எறிகணைகளின் வரவோடு எப்போதுமே அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்பட்டனர்.

கிளிநொச்சியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் இடம்பெயர்ந்து வரும் மக்களினால் நிரம்பிக் கொண்டிருந்தன. இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் அநேகமானோர் விவசாயம் மற்றும் தோட்டத்தொழில்களில் வெற்றிகரமாக ஈடுபட்டுவந்தவர்கள். அயராத உழைப்பை முதலிட்ட தன் மக்களுக்கு அள்ளிக்கொடுத்துவந்த மண்ணின் கடைசிநேரக் கையுறை போல வந்தவர்கள் அனைவரும் பல்வேறு மரக்கறிகளை பெருமளவில் தம்முடன் கூடவே எடுத்துவந்தனர்.

வழமையாக யுத்தம் காரணமாக இடம்பெயர்பவர்கள் எல்லாவற்றையும் இழந்து கையேந்தும் பரிதாப நிலையிலே இருப்பதே உலகெங்கினும் நாம் காணும் வழமை. ஆனால், எம்முடைய மக்களோ வந்த இடத்திலும் தொழில்முயற்சிகளில் ஈடுபட்டனர். உறவுகள் உள்ளவர்கள் அவர்களோடு தங்க மற்றவர்கள் ஆங்காங்கு வெறுமையாகக் கிடந்த காணிகளில் தற்காலிகக்கக்கொட்டகைகளை அமைத்து, தாம்தாம் முன்னர் மேற்கொண்டுவந்த தொழில்களுக்கேற்ப வாழ்வாதாரங்களை நிறுவிக்கொண்டனர்.

ஏற்கெனவே பல இடப்பெயர்வுகளுக்கு முகங்கொடுத்த இனமென்ற காரணத்தினாலோ என்னவோ வேரோடிய தத்தம் பகுதிகளிலிருந்து இடம்பெயரும் வலி அம்மக்கள் முகத்திலே தெரிந்தபோதிலும் சளைக்காது வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக அனைவரும் காணப்பட்டனர். இதற்கு ஒரு சோற்றுப்பதமாக கிளிநொச்சியின் மேற்குப்புறநகரில் உள்ள முறிப்பு பகுதியைக் குறிப்பிடலாம்.

மிகவும் சனஅடர்த்தி குறைந்த கடைத்தெருக்களற்ற குக்கிராமமாக இருந்த அப்பகுதி திடீரென மாநகருக்கேற்ற சகல உட்கட்டுமானங்களையும் கொண்டதாக மாற்றம்பெற்றிருந்தது. சிகையலங்கார நிலையத்திலிருந்து இலத்திரனியல் சாதனங்களின் காட்சியறைவரை அனைத்துமே அங்கு திடீரென கிளைவிட்டிருந்தது. வந்தவர்களால் தமக்குப் போட்டி என்ற வஞ்சக மனப்பான்மை ஏதுமற்று வர்த்தக சம்மேளனங்களும் அவர்களுக்குத் தம்மாலான ஒத்தாசைகளை வழங்கிவந்தன.


மக்கள் அனைவரினதும் முகத்திலும் சவால்களை எதிர்கொள்வதற்கான உழைப்பின்மீதான ஆர்வம் பிரகாசித்தது. கௌரவமான வாழ்க்கைக்கு நாம் கொடுக்கவேண்டிய விலை என்பதைப் பெருமூச்சுடன் எம்மக்கள் வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். களமுனைகளுக்குபோராளிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கு கைகாட்டிக்கொண்டு அந்தப் பிள்ளைகளுக்காக இறைவனை நேர்ந்துகொள்வர்.

இப்படியான காலத்தில் முறிப்பு நோக்கிய தனது முதலாவது எறிகணைவீச்சிலே தற்காலிகக்கொட்டகைகளை இலக்குவைத்து 5 தமிழுயிர்களைப் பலியெடுத்ததுடன் எதற்கும் சளைக்காத கிளிநொச்சி எதிரியின் இடையறாத இலக்காகியது. கிபீர், வேவுவிமானம், எறிகணைவீச்சு, பல்குழல்-எறிகணைவீச்சு என கிளிநொச்சி முழுமையாக முற்றுகைக்குட்பட்டது. நிமிர்ந்த மக்களின் நேரிய அன்றாடம் இரவு, பகல், காலை, மதியம், மாலை என்ற எந்த வேறுபாடுமின்றி குறிவைக்கப்பட்டது.


வந்தவர்கள் மட்டுமன்றி இருந்தவர்களும் முல்லைத்தீவு வீதியை ஒட்டிஇடம்பெயரத் தொடங்கினர். அவர்களுடன் சேர்ந்து அவர்களின் தொழிலாதாரங்களும் கூடவே! கிளிநொச்சியின் மடி தனது பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி வலிநிறைந்த அந்தப் பிரிவை ஜீரணிக்கக் கற்றுக்கொண்டது. பலமான பதுங்ககழிகளை அமைத்துக்கொண்டு வருவது வரட்டும் என்றிருந்த சிலரும் அயலவர்கள் எவருமேயற்ற அசாதாரண சூழலில் வாழ்வதற்கு மனம் அனுமதிக்காமல் அங்கிருந்து வெளியேறினர்.

அழகிய கிளிநகரின் வெறிச்சோடிய கோலம் இதயத்தை நெருக்க கனகபுரம் துயிலுமில்லத்தில் ஒருமுறை விழிகளைவீசித் தரிசித்துவிட்டு மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையுடன் பல்குழல்-எறிகணைகள் துரத்த பரந்தன் சந்தியினால் முல்லைவீதிக்கு இறங்கினேன்.


எவ்வளவு உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருந்த கிளிநொச்சி நகரம் தன்னைக் காப்பதற்காக உயிரை அரணாக நிறுத்திக்கொண்டிருந்த போராளிகளைத் தவிர மற்றைய அனைவரையும் பாதுகாப்பாக இடம்பெயர விட்டுவிட்டு நெஞ்சு கனக்க தவித்துக்கொண்டிருந்தது. இவ்வளவு காலமும் வாழ்ந்த இடத்தைவிட்டுப் பிரிவதற்கு மனம் இடம்கொடுக்காதபோதிலும் இதற்கு மேலும் அங்கு வசிப்பதற்கு முடியாத நிலமையே ஏற்பட்டிருந்தது.

நரபலி எடுக்கும் சிங்களத்தின் அகங்காரப்பசி எல்லா இடங்களிலும் இரவுபகலாக எறிகணைகள் வடிவத்தில் தமிழுயிர்களைத் தேடிக்கொண்டிருந்தன. இப்படியிருக்க கடைதெருக்கள், சந்தை என்பன மட்டுமன்றி அயலவர்கள் கூட இல்லாத நிலமையில் இடம்பெயர்வதைத்தவிர வேறுவழி இல்லாதிருந்தது.

ஏற்கெனவே இடம்பெயர்தோரில் பெரும்பாலானோர் உருத்திரபுரம், வட்டக்கச்சி, பரந்தன் தொட்டு தர்மபுரம் வரையிலான முல்லைவீதியை ஒட்டி ஏதோ தமக்குக் கிடைத்தவற்றைக்கொண்டு
தற்காலிகக்கொட்டில்களை அமைத்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் தத்தம் பொருட்களை நகர்த்துவதற்காக வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவேண்டியிருந்தவர்கள் பெற்றோல் லீற்றர் 1600, ரூபா என்ற நிலையில் வேறு வழியின்றி, அடுத்த கட்ட இடப்பெயர்வின்போது எடுத்துச்செல்லும் தமது சொத்துக்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.

இந்த இடத்தில் 2006 இலிருந்து வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த வன்னிப்பகுதிக்கான எரிபொருள் பின்னாளில் முற்றாக சிறீலங்கா அரசினால் தடைசெய்யப்பட்டிருந்தபோதும் 2008 இற்குப் பின்னரும் வாகனங்கள் தொடர்ந்து ஓடிய மர்மம் கட்டாயம் பதிவுக்குரியதாகின்றது.


ஆரம்பத்தில் மன்னார்ப்பகுதியூடாக கடல்வழியிலே மேலதிகச்செலவுகளுடன் எரிபொருளை தமிழீழ நிர்hக சேவையினர் இறக்குமதி செய்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். எனினும் மன்னார் பிரதேசம் அரச ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர்  எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. சேமிப்புக்குப் பெயர்பெற்ற தமிழினம்  ஏற்கெனவே தனது கையிருப்பிலிருந்த பெற்றோலை மிகக்கவனமாகப் பயன்படுத்தப் பழகியிருந்தது.
சரிக்குச்சமன் மண்ணெண்ணெய் கலந்து ஓடிய வாகனங்கள் இப்போது சூப்பியில் சில துளிகளைப் பருகி ஸ்ராட் ஆகியவுடன் மண்ணெண்ணெயிலே ஓடுவதற்குப் பழகியிருந்தன.

வீதியிலே திடீரென்று ஏற்றம் அல்லது வேறு காரணம் கருதி வாகனம் ஓய்வுக்கு வரப்பார்க்கும்போது உடனே ஓட்டுநர் சூப்பியிலிருந்து ஊதிக்கொடுக்க மீண்டும் உயிர்ப்படைந்து பயணிக்கும் வாகனங்களே வன்னியின் ஒட்டுமொத்த பிரயாணங்களையும் எல்லாத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சாத்தியப்படுத்திக்கொண்டிருந்தன.

உயிர்காப்பு, இடப்பெயர்வு உட்பட எல்லாவற்றுக்குமே இந்த சூப்பிகள் தான் உயிராயிருந்தன. இப்படித்தான் எமது இடப்பெயர்வும் வலிகளை நெஞ்சில் நிறைத்துக்கொண்டு விசுவமடுவரை நிகழ்ந்தது. ஓரளவு சன அடர்த்தியைக் கொண்ட தர்மபுரம் திடீரென்று
லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. பரந்தனிலிருந்து தர்மபுரம் வரையிலான முல்லைவீதியின் இரு மருங்குகளிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளான அடிமைவாழ்வை விரும்பாத தமிழ்மக்கள் கிடைத்த இடங்களிலெல்லாம் தமக்கான இருப்புகளை அமைத்துக்கொண்டிருந்தனர்.

காலங்காலமாகத் தாம் கஸ்ரப்பட்டுச் சேமித்து கட்டிய வீடுகளையும் தேட்டங்களையும் ஆங்காங்கே கைவிட்டுவிட்டு விடுதலைவிரும்பிகளாக வீதிக்கரைகளில் இரண்டு தகரங்களை இறுகச்சாத்திவிட்டு முழுக்குடும்பமும் அதற்குள் வாழ்ந்த வாழ்க்கை மனதை நெகிழவைக்கும். இப்படியாக விசுவமடுவில் நாம் குடிகொண்டபோது கிளிநொச்சி முழுமையான தாக்குதலுக்குட்பகுதியாக அதிர்ந்துகொண்டிருந்தது.

களமுனைக்குப் போராளிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பெருமூச்சுடன் வீதியெங்கும் வாழ்த்தியனுப்பும் மக்கள் அவர்களுக்காக கடவுளை நேர்ந்துகொள்வர். அதேபோல அந்தக் காவல்தெய்வங்களும் தாம் நேசிக்கும் மக்களுக்காக புன்னகைத்த முகங்களுடன் போர்முனைக்கு விடைபெறுவர்.

அதேவேளை தேராவில் துயிலுமில்லமும் மண்ணின் விடுதலைக்காக, மக்களின் சுபீட்சத்திற்காக தம்மை அர்ப்பணிக்கும் பிள்ளைகளின் விதைப்பினால் தினமும் கனத்துக்கொண்டிருந்தது. களமுனைகளும் உள்நோக்கி நகர்ந்துவந்துகொண்டிருந்தன.

உருத்திரபுரம், வட்டக்கச்சி, பரந்தன் பகுதிகளிலிருந்தும் மக்கள் இடம்பெயரத்தொடங்கியிருந்தனர். 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன் கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலிருந்து முல்லைவீதியை ஆக்கிரமிக்கும் தன் நோக்கத்திற்காக தர்மபுரம், விசுவமடு பகுதிகளும் எறிகணை, கிபீர் தாக்குதல்களுக்கு உட்பட்டிருந்தது. தர்மபுரம் பாடசாலையில் தற்காலிகமாக இயங்கி வந்த வைத்தியசாலையின் சேவையும் இடம் மாறவேடியிருந்தது.

தைத்திருநாள் பிறந்து இரண்டு நாளே ஆகியிருந்த வேளையில் தொடர்ச்சியான சரமாரியான எரிகுண்டுத்தாக்குதலை தர்மபுரம் எதிர்கொண்டது. இடையிடையே விசுவமடுவும் எறிகுண்டுத்தாக்குதல்களால் அதிரத்தொடங்கியது. கொட்டிலோடு போட்ட பதுங்குகுழியோடு நகர்ந்த நாட்களைப்போல இனியும் முடியாது என்பது புரிந்தது.

கொலைவெறியர்படை 5,6 கி.மீ. வரை நெருங்கிவிட்டது. அதற்கு முதல்வாரம் விசுவமடு பகுதியை அமைதிவலயமாக அறிவித்து உலங்குவானூர்தி மூலம் துண்டுப்பிரசுரங்கள் வீசியதன் அர்த்தத்தை கண்மூடித்தனமான எறிகணைவீச்சுகள் புரியவைத்துக்கொண்டிருந்தன.

பதிவு இணையத்திற்காக
15-05-2020












No comments