கண்ணீர் வணக்கம் - பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

மீண்டும் ஒரு நல்ல உள்ளத்தை காவுகொண்டிருக்கின்றது கொள்ளைநோய் (coronavirus) தமிழ்த் தேசியப்பற்றாளரும், தமிழீழம் விடுதலைபெற பல்வேறு
வகையினில் பாடுபட்டவருமான திரு.லோகசிங்கம் பிரதாபன் அவர்களின் பிரிவுச் செய்தி எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பிரித்தானிய தமிழ் விளையாட்டுத்துறை ஒரு சிறந்த நிர்வாகியை இழந்து நிற்கின்றது.

புலத்திலும், தாய் நிலத்திலும் தமிழ் மக்கள் தம் அடையாளத்தை தொலைத்து விடக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு தளங்களில் நின்று பணியாற்றியவர் திரு.பிரதாபன் அவர்கள் கல்வித்துறையிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம்மிக்க இவர் எம் எதிர்கால சந்ததியும் அதில் வளம்பெற வேண்டுமென அக்கறையுடன் செயற்பட்ட தமிழ் தேசியப்பற்றாளர்.

பிரித்தானிய தமிழ் மெய்வல்லுநர் போட்டிகள் திறம்பட நடைபெற அயராது உழைத்த அர்ப்பணிப்பாளன். நிர்வாகத்திறனும், நேர்மையும், அனைவரையும் அரவணைக்கும் மனப்பக்குவமும் கொண்ட பண்பாளன்.
தமிழ் மக்களின் புனர் நிர்மாணப்பணிகளுக்கு நிதி உதவிகளும், நிர்வாக ஒருங்கிணைப்புக்களும், தனது விடுதியில் தங்க இடமும் தந்த இனமானத் தமிழன்.

தமிழீழத்தில் வாழும் சிறார்களுக்கு வெளிநாடுகளில் உள்ளதுபோல் ஒரு நிதியுதவிச் சேவையை வழங்க வேண்டுமென்ற கனவு கண்டவர். தாயகம் தொடர்பாக எவ்வேளை அழைத்தாலும் எதுவித சலிப்புக்களுமின்றி உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் ஆலோசனைகளும் உதவிகளும் வழங்கும் நற்பணியாளர். இவரது இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு ஒர் பேரிழப்பு. பிரித்தானிய தமிழர் வரலாற்றில் இவரது
பெயர் நீக்கமற நிறைந்திருக்கும்.

இப்படியான ஓர் நல்லுள்ளத்தை இழந்து தவிக்கும் இவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள்,உறவினகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. சமூக அக்கறையுடன் வலம் வந்த
இவ்வுள்ளத்தின் ஆத்மா அமைதியுடன் பயணிக்க வேண்டி எமது இதய வணக்கத்தை செலுத்துகின்றோம்.

“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ”

விளையாட்டுத்துறை,
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
பிரித்தானியா.

No comments