சம்பூர் பெருநிலப்பரப்பு வேரோடு பிடுங்கி எறிப்பட்ட வலிமிகுந்த நாட்கள். (25.04.2006)

சங்ககால கிராமத்தின் பண்புகளோடும் அதன் இயங்கியல் தன்மையோடும், தமிழர் பண்பாண்டை தழுவியசெழுமையோடும் செழித்த நிலமாக
சம்பூரணம் எனும் ஊர் மண்வாசனை வீசி, நெல் வாசனை கொண்டுகால்நடைகளின் உரவானை பூசி, கடல் அலையில் மீன்வாசனை தடவி, கல்வியால் தலைநிமிர்ந்து என்றும்நீடித்து நிலைக்கும் புனித நிலம்.

இயற்கை துறைமுகத்தின் காப்பரணாய் இருந்த நிலம். சர்வதேச புவிசார் அரசியியலை இன்றும் நடத்தும்நிலம். சர்வதேச அரசுகளின் கழுகுப்பார்வையால் விழுங்கப்பட்ட நிலம். திருகோணமலை மாவட்டத்திற்கேசிகரமாய் அமைந்த நிலமெனும் பெருமை சூழ்ந்த நிலம். அன்றைய நாட்களில் அளவிடமுடியாத மகிழ்ச்சியைஎமக்குள் விதைத்து, எம்மை வளப்படுத்திய நிலம். ஒரே நாளில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதை இத்தனைவருடம் கடந்தும் வலி குறையவில்லை அந்த நிகழ்வு.

சம்பூரை தமிழீழ விடுதலை இராணுவம் தமது ஆட்சி அதிகாரத்தில், நிருவாகத்தை நடத்திக் கொண்டிருந்தகாலமது. தமிழீழ காவற்துறை பணிமனை, பொருண்மியம் போன்ற சேவைகள் மக்களை நல்வழிப்படுத்தியகாலமாக அமைந்திருந்த தருணத்தில் தான் எதிர்பாராத பெரும் அபாயம் எம்மை நெருங்கி, ஊர் மனை விட்டேநாலா பக்கமும் பிடுங்கி எறியப்பட்டோம்.

சித்திரை மாத பிற்பகுதியில் இலங்கையின் தலைநகரில் நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும்அகோரமாக தமிழீழ தலைநகரின் மிகப்பிரல்யமான சம்பூர் கிராமத்தின் மீது அரச இயந்திரத்தின் அதியுச்சதாக்குதல், நண்பகல் தாண்டி நிகழ்த்தப்பட்டது. அது நடக்கும் என்ற முன்னறிவித்தலும் மக்களுக்கு மிகத்துல்லியமாக அறிவிக்கப்படும் இருந்தது.

இதுவரை காலமும் போரின் தாக்கத்தை அனுபவித்தே இருந்தாலும், இவ்வாறான பேரனர்த்தத்தால் சம்பூர்மண்ணும் மக்களும் பெரும் துயரத்தை தூக்கிச் சுமக்கலாயினர். தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ்ந்த மக்கள்கையேந்தலுக்கு அணிவகுக்கும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அப்படியானதொரு துன்பியலுக்குத்தள்ளப்பட்ட அந்த கொடிய நாட்களை இலகுவில் மறந்திட யாரால் முடியும்.

சம்பூர் பெருநிலப்பரப்பில் எங்கு வாழ்ந்தாலும் நிட்சயமாக சிறப்பாய் வாழ அந்த மண் எம்மை நெறிப்படுத்திவழிப்படுத்தும். ஆனால் நிகழ்ந்ததோ வார்த்தைகளால் விபரிக்க முடியாத வாழ்வின் அலங்கோலம். எதையும்சாதிப்போம், எதிலும் உயர்ந்தே நிற்போம் என்ற மக்களின் நெஞ்சுரம் சுக்குநூறாய் உடைத்தெறிந்தது அந்தநாள் இரவின் அநாதரவான பயணம்.

வழமைபோல் காலையும் புலர்ந்தது, இயல்பு போல் யாவையும் நடந்தது. எதிலுமே குறைவின்றி மக்களின்அகமும் மகிழ்வில் தான் மிதந்தது. வானொலின் அவரச் செய்தியாய் எங்கள் காதுகளை நுழைய முன்பே, ஒலிபெருக்கியின் சத்தம் எங்கள் செவிப்பறையை தட்டி “ இன்று எம் மண்ணின்

 மீது அரச இயந்திரத்தின் அதியுயர் தாக்குதல் நிகழப்போகிறது. தற்காப்பரண்களை தயார் செய்து உங்களைபாதுகாத்து கொள்ளுங்கள்” என உயிரை உலுக்கி உடலில் பயத்தை ஏற்றியது.

சம்பூர் மண் வாழையும் தென்னையும் நடவும், மரணித்த உறவுகளை புதைக்கவும் குழி வெட்டிட அனுமதித்த  மண், முதன்முதலாக தன் மக்கள் வாழ்வுக்காக பதுங்கு குழிகள், அகழிகளை வெட்டிட அனுமதித்தது. அதுவரைமரங்களை வெட்ட அனுமதிக்காத இந்த புனித மண் தென்னை, பனை மரங்களை வெட்டி அதன் மூலமானகாப்பரணை அமைத்திட அனுமதித்தது. ஒவ்வொரு வீட்டிலும் இந்நிகழ்வு அரங்கேறி பாதுகாப்பு பலமானது.

அரச இயந்திரத்தின் கொடூர செயலை எதிர்த்து வாழ மக்கள் தள்ளப்பட்டனர். அந்த மண்ணும் மக்களும்அதிரும்படி அரச விமானங்கள் தங்களது இரசாயண குழந்தைகளை பிரசவிக்க தொடங்கின. காற்றும்கந்தகத்துகள்களை சுமந்தே வீசத்தொடங்கின. இதுவரை காலமும் இவ்வாறாதொரு அதிர்வை தாங்காதநிலமும் மக்களும் அன்றுதான் புதியதோர் ஆபத்தை எதிர்நோக்கி கதிகலங்கி நின்றன.

விமானத்தின் ஒலியோ காதை கிழித்தபடி குறைய, கதிரவனும் தன் ஒளியை குறைத்து இருளை பரவ விட்டநேரத்தில், ஒரளவு பயத்தை தாங்கிக் கொண்டு அந்த மண் இருளை அள்ளி பூசிக்கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக பல பல ஒளியை கக்கியபடி, பல்குழல் பீரேங்கி தன் வயிற்றுள் நிறைத்து வைத்திருந்த, அதுவும்ஒரேநேரத்தில் நாற்பது இரசாயண ரவைகளை பிரசவிக்க தொடங்கின. எந்த முன்னனுபவமும் இல்லாதமக்கள் பயபீதியில் அங்கும் இங்கும் ஓடி முண்டியடிந்தனர்.

நாற்பது இரசாயண குண்டுகளை வெளியேற்றிய களைப்பில் அந்த பல்குழல் பீரேங்கி சற்று ஓய்வெடுத்ததோஅல்லது தன் வயிற்றை மீண்டும் நிரப்ப எடுத்த நேரமோ தெரியவில்லை. அந்த மணிநேரத்தில் சம்பூர் மண்ணைவிட்டு மக்கள் கைகளில் இருந்தவற்றை பிடித்துக் கொண்டு இடம்பெயரத் தொடங்கினர். கண்ணீரும்கவலையுமாக அந்த நள்ளிரவில் சம்பூர் மண்ணை விட்டு அம்மக்கள் எங்கோ பிடுங்கி எறியப்பட்டனர்.

சம்பூர் பிரதான வீதி எப்போதும் இவ்வாறாதொரு அவலத்தை அதன் வாழ்நாளில் அறிந்திருக்காத வகையில்அவ்விடப்பெயர்வு நிகழ்ந்தது. கடற்கரைச்சேனை, சந்தோசபுரம், பாட்டாளிபுரம், உப்பூறல், இலங்கைத்துறைமுகத்துவாரம், வெருகல் வரை நீண்ட இடப்பெயர்வு திருகோணமலை மாவட்ட எல்லை தாண்டி கதிரவளி, வாகரை மட்டக்களப்பில் அதன் பயணம் முடிவுற்றது.

எண்ணிலடங்காத துன்பம், சமூக வாழ்வியலை புரட்டிப் போட்ட தாக்கம், ஒருவேளை உணவுக்காகஅணிவகுத்து நின்ற கோலம் யாவும் மனதை இன்றும் விட்டகலாத துயர அனுபவங்கள் எனலாம். பல பலநலன்புரி நிலையங்கள் அங்காங்கே நிறுவப்பட்டு மக்கள் பராமரிக்கப்பட்டாலும், மக்களுக்கோ தம் மண்ணைஇழந்த துயரமும், எப்போது அந்த மண்ணின் வாசத்தை, அந்த காற்றை, கடலின் உப்புக்காற்றை, தமதுகால்நடைகளை காண்பதற்காக சுமார் பத்து வருடங்களாக போராடியவண்ணம் இருந்தனர்.

சுமார் பத்து வருட கால இடைவெளியில் சம்பூர் எனும் பழந்தமிழ் கிராமத்தின் அடையாளம் எதுவும் இல்லாதசெயலை அரச இயந்திரம் திறம்பட செய்து, வீடுமனைகள் அற்ற ஓரிடமாக மாற்றும் செயற்றிட்டத்தைமுன்னெடுத்து, சூழலை மாசுபடுத்தும் அனல்மின்சார நிலையத்தை நிறுவும் திட்டத்தை மிகத்தீவிரமாகசெயற்படுத்தியது. இருந்தபோதும் மக்களின் உறுதியான போராட்டம் அந்நிலத்தை மீட்டு அங்கு அம்மக்கள்வாழவும் வழியை வகுத்தது.

சம்பூர் மண்ணை விட்டு அம்மக்கள் பிடுங்கி எறியப்பட்டு சரியாக பதினான்கு ஆண்டுகளாகும். மக்கள்குடியிருப்புக்கள் மீதாக வீசப்பட்ட பல்குழல் பீரேங்கி தாக்குதலின் போது, ஒரு சில குடும்பங்களோடு சுமார்  இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டதுடன், பலர் காயப்பட்ட வலியோடு அந்த துயரத்தின்கண்ணீர் வழிந்தோடியது.

இந்நாளில் படுகொலையான எம் உறவுகளான, நவரெட்ணம் ரஞ்சிதமலர், பத்தினியன் நாகம்மா, நாகையாருக்குமணிதேவி, வீரபத்திரன் பார்வதிப்பிள்ளை,காளியப்பு மெய்யன்,மெய்யன் செல்வராணி,மெய்யன்கிஷாந்தன்,விநாயகமூர்த்தி விஜேந்திரன், கதிர்காமத்தம்பி,தாமோதரம் விவேகானந்தம், விவேகானந்தம்யாழினி,

யோகேஸ்வரன் சீதவம், இன்பராசா தர்சாந்தினி,ராசதுரை லலிதா,வைரமுத்து இராசநாதன், இ. நாகேஸ்வரி.இ.காளிராசா

இ.நாகதீபன்   போன்றவர்கள் கொலை செய்யப்பட்டனர். எங்கள் உறவுகளின் இழப்பை இன்றும் நினைந்தேவருந்துகிறோம். இவர்களின் புனித ஆன்மா சாந்தி பெற வணங்குகிறோம்.

சம்பூர் மண்ணின் மீதான சர்வதேச மற்றும் சிங்கள அரசின் பார்வை இன்னமும் முற்று முழுதாக நீங்கவில்லை, என்பது கடந்த கால பட்டறிவுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடிகின்றது. இன்னமும் இந்த மண் பல பலஅபாயங்களை எதிர்நோக்கிய தருணங்களில் இருக்கின்றது. இத்தகைய ஆபத்தை தகர்க்கும் வல்லமைஅம்மண்ணில் வாழ்கின்ற மக்களின் மனவுறுதியிலும் ஒற்றுமையிலுமே தங்கியுள்ளது.

No comments