வட்டுக்கோட்டையில் அராஜகம் புரிந்த பொலிஸார்

ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம்சாட்டி நியாயமாற காரணங்கள் ஏதுமின்றி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சொல்லப்படும் சம்பவம் இன்று (25) பதிவாகியுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள இன்றைய தினம் பகல் சித்தங்கேணி பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக முதியவர் ஒருவர் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள சித்தங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார். அவ்வேளை சித்தங்கேணி சந்தியில் கடமையில் நின்ற பொலிசார் அவரை மறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

அத்துடன் "நாங்கள் மூன்று மாத காலமாக தண்ணீர் இல்லாம வீதியில் நிற்கிறோம். உனக்கு ஒருநாள் தண்ணீர் இல்லாம இருக்க முடியாதா” எனக் கேட்டு தண்ணீர் எடுக்க அனுமதிக்காது முதியவரை வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டி அனுப்பினர். அதனால் அவர் தண்ணீர் எடுக்காமல் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இதேவேளை இன்று காலை வட்டுக்கோட்டை மாவடி முருகமூர்த்தி ஆலய தண்ணீர் தாங்கியில் தண்ணீர் முடிந்தமையால் மோட்டர் போட ஆலயத்திற்கு சென்ற ஆலய நிர்வாகி மீதும் வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த ஆலய நீரையே மூளாய் , அராலி , சித்தங்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் நீர் தாங்கியில் நீர் முடிந்துவிட்டது.

மோட்டர் போட்டு விடுமாறு ஊரவர்கள் கோரியதனால் , ஆலய நிர்வாகி மோட்டார் போடுவதற்காக ஆலயத்திற்கு சென்ற போது வீதியில் நின்ற பொலிசார், "ஊரடங்கு நேரத்தில் ஏன் வெளியே வந்தாய்" என அவர் மீது கொட்டனால் தாக்கியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மது போதையில் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments