அன்னை பூபதியை நினைவில் கொள்வோம்! யாழ்.பல்கலைக்கழகம்


அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (19) வெளியிட்ட அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும்,

அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார்.

நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினைவுகூருவது தமிழ் மக்களின் தார்மீக கடமையாகும்.

காந்தியமும் அகிம்சையும் பேசும் இந்திய அரசின் உண்மையான கோரமுகம் இவர்களின் தியாகத்தால் கிழித்தெறியப்பட்டது. இந்தியா தமிழ் மக்கள் சார்பாக செயற்படும் என்ற தமிழ் மக்களின் நீடிய எதிர்பார்ப்பின் போலித்தன்மையை தமிழ்மக்கள் உணர்ந்து கொள்ள கிட்டிய ஒரு சந்தர்ப்பமாகவும் இது அமைந்திருந்தது.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் போரை நிறுத்துங்கள் விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்ற எளிமையான கோரிக்கைகளோடுதான் அன்னை பூபதியும் அவர் சார்ந்த அன்னையர் முன்னணி அமைப்பும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலையிலேயே அன்னை பூபதி சாகும் வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்திய அரசு அவரை சாகவிட்டது ஆனால் தமிழ் மக்கள் அவரை தமது இதயங்களில் தாங்கிக் கொண்டனர். தமிழ் மக்களின் வீரத்தினதும் தியாகத்தினதும் குறியீடாக என்றும் அன்னை உயர்ந்து நிற்கிறார்.

பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ள சூழலில் வழமைபோல எமது நினைவுகூரலை செய்ய முடியாத இக்கட்டான நிலையில் நாம் இருந்தாலும் இவ்வறிக்கை மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்னையின் நினைவுகூரலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறோம். - என்றுள்ளது.


No comments