தியாங்களை ஊரடங்கு தளர்வு பயனற்றதாக்கி விட்டது
ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது என்று யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் நேற்று (20) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில்,
கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று (நேற்று) யாழிலும் விலக்கப்பட்டது.
இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக் கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு தளர்வினால் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புபடாத பல கடைத் தொகுதிகள் யாழ் நகர்ப்பகுதியில் செயற்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக மதுபானசாலைகளில் அதிகமானோர் அலைமோதியதை அவதானிக்க முடிந்தது. இவை மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். அத்தியாவசியமற்ற கடைத் தொகுதிகளை வைரஸ் தாக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இக் காலப்பகுதியில் மூடி ஒத்துழைப்பு வழங்குவதே சிறப்பானதாகும். இதனை உரிய தரப்பினர் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும் என்பது எனது பகிரங்கமான வேண்டுகோளாகும்.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நேரங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், உரிய சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளிகளை தவறாது பின்பற்றி சமூகத்தை பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். - என்றுள்ளது.
Post a Comment