சேனாதியின் வற்புறுத்தல்; அமைச்சர்கள் ஆமோதித்தனர்

மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெறுவதையும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஆகியோருடன் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சேனாதிராசா,

உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள், தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஓகஸ்ட்டில் நடைபெறும் என்றும், “மே” 11ந் திகதி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் உயர்கல்வி, பாடசாலைக் கல்வி அமைச்சுக்கள் அறிவித்துள்ளன.

நேற்று (24) மாலையில் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடனும் இன்று (25) காலை கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடனும் மேற்படி விடயங்கள் பற்றி தொலைபேசி மூலம் என்னுடன் விரிவாகப் பேசியிருந்தார்கள். கொரோனா வைரஸ், ஊரடங்கு நிலமைகள் பற்றியும் விபரங்களைக் கேட்டறிந்தனர்.

தற்பொழுது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு நடைமுறைகள் தொடர்கின்றன.

நாடு முழுவதும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரிடையேயும் கடற்படையினரிடமும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.

இந்நிலமையில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதையும் மாணவர்களுக்கான பரீட்சைகள் நடாத்துவதையும் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாண்டு இறுதி வரை மருத்துவ நிபுணர்களின் ஆய்வுகள், அறிவுறுத்தல்களை அறிந்து பின்பற்றி கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதையும் பரீட்சைகளையும் மேற்கொள்ளலாம்.

கல்வி நிபுணர்கள், தமிழர் ஆசிரிய அமைப்புக்கள் பரீட்சைகளைப் பிற் போடும்படியே கேட்டுள்ளனர். அவர்களுடனும் கூடி ஆராய்ந்து பொருத்தமான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கல்வி அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அமைச்சர்களும் இவ்வேண்டுகோளை ஏற்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.

முதலில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறுவர் பள்ளிகள், கல்விக் கட்டமைப்பிலுள்ளோர் மட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளிடத்திலிருந்தே கொவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுவதும் அவசியமானதாகும் என வற்புறுத்துகின்றேன். - என்றுள்ளார்.

No comments