அரசாங்கம் மக்களுக்கானதா? ஆளும்தரப்புக் கட்சிகளுக்கானதா? பனங்காட்டான்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த பத்தாண்டில் கோதபாய தன்னிச்சையாகச் செயற்பட்டு அனுபவப்பட்டவர். இப்போதுள்ள
சூழ்நிலையில் அதே அனுபவத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டாது, தேர்தலையும் நடத்தாது, முன்னாள் உறுப்பினர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டு தனிநபர் ஆட்சியை நடத்த கோதபாய தயங்க மாட்டார். கொரோனா கோதபாயவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை - முழுமையான சந்தர்ப்பத்தை அளிக்கப் போகிறதா?

உலகத்தைச் சுற்றிவளைத்து கட்டிப்பிடித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவும், இந்தக் கொரோனாவைச் சாட்டாக வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் இலங்கையின் ஜனாதிபதி கோதபாயவுமே இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கையில் முன்னால் வந்து நிற்கின்றனர்.

மின்னாமல் முழங்காமல் காற்றோடு காற்றாக வந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அது எப்போது தங்களுக்குள் புகுந்து விடுமோ என எண்ணி அந்த அச்சத்தால் நித்தம் நித்தம் ஷஇறந்து| கொண்டிருப்பவர்களே அதிகமாக இருக்கும்போல தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவிய பின்னர், கொஞ்சம் பிந்தித்தான் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும்  இது வருகை தந்தது. ஒருவகையில் பார்க்கில் உலக மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்து இந்த நாடுகளுக்கு வந்ததுபோல கொரோனாவின் வருகையும் அமைந்தது.

முன்னைய ஒரு சினிமாப் பாடல்போல ஷசமரசம் உலாவும் இடமாக| உலக முற்றத்தை இது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் ஒரேயொரு வல்லரசு தாமே என்றும், உலகத்தின் பொலிஸ்காரன் தாமே என்றும், சகல நாடுகளுக்கும் தலைவன் தாமே என்றும் சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்காவே இப்போது கொரோனாவிலும் முதல் இடத்தில் உள்ளது.

இதனை எழுதும்போது உலகில் கொரோனாவால் பீடிக்கப்பட்டவர்கள் 22 லட்சத்தை நோக்கி விரைகிறது. மரணித்தவர்கள் தொகை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்காவில் இந்த உபாதைக்குட்பட்டவர்கள் இன்றுவரை ஆறரை லட்சத்துக்கும் அதிகம். மரணித்தவர்கள் முப்பதினாயிரத்தைத் தாண்டிவிட்டனர். நோயின் வேகத்துக்கு போட்டி போட்டவாறு இறப்பவர் தொகை விரைகிறது.

நோய்வாய்ப்பட்டவர்கள் மரணித்தவர்கள் தொகையில் அமெரிக்கா முதலிடம் என்றால், இரண்டாமிடத்திலிருந்து ஐந்தாம் இடம்வரை முறையே இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.

வெளிநாட்டுக்காரர்களை அதிகம் கொண்ட கனடா இந்த வரிசையில் இப்போது பதின்மூன்றாம் இடத்திலுள்ளது. இங்குள்ள கியுபெக் மாகாணமும் ஒன்ராறியோ மாகாணமும் சுமார் தொள்ளாயிரம் பேரை பலி கொடுத்துவிட்டது. தமிழர்கள் செறிந்து வாழும் இவ்விரு மாகாணங்களிலும் இறப்புத் தொகை கனடாவின் மொத்த எண்ணிக்கையில் (1030) இப்போது 80 வீதத்துக்கு அதிகமாகியுள்ளது.

எந்தவொரு நிகழ்வும் அடுத்த வீட்டிலும் அதற்கு அடுத்த வீட்டிலும் நடைபெறும்போது அதனை ஒரு செய்தியாக பார்ப்பதுதான் மனித வழக்கம். கொடிய போர்க்காலங்களிலும் தங்கள் வீடு தப்பியது என்ற போக்கில் இவ்வாறு பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் சாதாரண மனிதர்கள்.

ஆனால், அதுவே தங்கள் வீட்டுக்குள் நடைபெறும்போதுதான் அதன் தாக்கத்தை அவர்களால் உணர முடிகிறது. அப்போதுதான் அவர்கள் உண்மை நிலையை உணர்ந்து நிலைமையை அவதானிக்கத் தொடங்குகிறார்கள்.

கடந்த இரண்டு வாரங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் கொரோனாவால் மரணத்தைத் தழுவியவர்களில் பலர் தமிழர்கள் என்ற தகவல் இப்போது பரவலாகத் தெரியவந்துள்ளது. இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளில் எங்களுக்குத் தெரிந்த பல குடும்பங்கள் தங்கள் குடும்ப உறவுகளை இழந்துள்ளனர். எனினும் உண்மையான இழப்புகளின் எண்ணிக்கை இதுவரை வெளிவரவில்லை.

இந்த வாரத்தில் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் நிறைந்து வாழும் ரொறன்ரோ பெருநகரில் இந்நோய் காரணமாக இரு தம்பதியர் அடுத்தடுத்து மரணத்தைத் தழுவியுள்ளனர். இவர்களில் ஒரு தம்பதியர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்தவர்கள். இவர்களின் மரணச்சடங்குகளில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு உறவினர்களோ நண்பர்களோ முற்றுமுழுதாக சமுகமளிக்க முடியாத நிலை இங்கு காணப்படுகிறது.

கனடாவில் கொரோனாவினால் இதுவரை மரணித்தவர்களில் சுமார் ஐம்பது வீதமானவர்கள் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்தவர்கள் என்றும், இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி திரேசா ராம் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களையே கொரோனா தாக்குமென்ற உலக சுகாதார நிறுவனத்தின் முன்னைய அறிவிப்பை கனடிய மரணங்கள் நிரூபிப்பவையாக உள்ளன. அதேசமயம் இந்நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்காதவரை இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமென்ற கனடிய பிரதமர் ரூடோவின் அறிவிப்பு மேலும் அச்சமூட்டுவதாக உள்ளது.

போர்க்காலத்தில் வன்னியில் இரவுபகலாக பணியாற்றிவிட்டு தற்போது புலம்பெயர்ந்து வாழும் மருத்துவர் ஒருவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், கண் முன்னால் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் உயிருடன் போராடியவர்களுக்குச் சிகிச்சையளித்த தாங்களே இப்போது கண்ணுக்குப் புலப்படாத கிருமிக்குப் பயந்து வாழ வேண்டியுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

சவர்க்காரம் கொண்டு சுடுநீரில் 20 விநாடிகளுக்குக் கைகளை கழுவினால் இந்நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றப்படலாமென்று வெளிவரும் தகவல் சம்பந்தமாக பதிவிட்டுள்ள அன்பரொருவர், பத்து ரூபா பெறுமதியான சவர்க்காரத்தால் கொரோனா வைரசைத் தடுக்க முடியுமென்றால், பலகோடி ரூபா செலவில் குண்டுகளைத் தயாரிக்கும் நாடுகளால் இதற்கு ஏன் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லையென்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நியாயமான கேள்விதான்! சர்வதேசத் தலைவர்களையே இக்கிருமி கலைத்துக் கொண்டு திரியும்போது  மருந்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு ஏது நேரமென்று ஒரு மாற்றுக் கேள்வியைப் போட்டால் எப்படியிருக்கும்?

தமிழீழப் போர்க்காலத்தில் கவிஞர் புதுவை ரத்தினதுரை அர்த்தமுள்ள ஒரு பாடலை இயற்றியிருந்தார். 'காற்றுப் புக முடியாத இடத்திலும் எங்கள் வீரர் புகுவர்" என்றவாறு அந்த வரிகள் அமைந்திருந்தன. கொரோனா வைரசும் அந்த வீரர்கள் போலவே தெரிகிறது.

கட்டிய மனைவியை கட்டிப்பிடித்து புரண்ட கட்டிலில் படுக்கவே பயமாக இருக்கிறது. அதில் கொரோனா இருக்குமோ எனப் பயப்படுகிறார் யதார்த்தமாகச் சிந்திக்கும் குடும்பத் தலைவர் ஒருவர்.

அண்மையில், இரண்டு முக்கியமான செய்திகளை தமிழக இதழ்களில் படிக்க முடிந்தது. இமயமலைச் சிகரத்தை எந்தத் தடங்கலும் இல்லாமல் பார்க்க முடிகிறது. பளிச்சென்று வெள்ளிக் கோபுரமாக அது காட்சியளிப்பதாக ஒரு செய்தி கூறிற்று.

இந்தியாவில் கரைபுரண்டு ஓடும் நதிகளும் ஆறுகளும் பளிங்குபோல காட்சி தருகின்றன. சுத்தமான அந்த நீரை அள்ளிக் குடிக்க வேண்டும்போல் இருப்பதாக தெரிவித்தது மற்றைய செய்தி.

வளிமண்டலம் மாசுபடாது இருப்பதே இதற்குக் காரணம். வான்வெளியில் விமானங்கள் பறக்கவில்லை. வீதிகளில் வாகனங்கள் ஓடவில்லை. கரிய புகை கக்கும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதுவே வளிமண்டலம் தூய்மையாக இருப்பதற்குக் காரணமென்று விளக்கிக் கூறின இச்செய்திகள்.

தீமைகள் மத்தியில் நல்லவையும் நடைபெறலாமென்று சொல்வது உண்மைதான். ஆனால் இந்த நன்மையை அனுபவிக்க விடாது மக்களை வீட்டுக்குள் முடக்கி தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது  கொரோனா வைரஸ்!

இலங்கைத் தலைநகரிலும் பல வீதிகள் வாகனப் போக்குவரத்தின்மையால் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிப்பதாக அங்கிருந்து வரும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இதுவும் உண்மைதான். ஆனால் கொரோனாவை கோதபாய ஆட்சித்தரப்பு எவ்வாறு தமக்குச் சாதகமாக்கி காய்களை நகர்த்துகிறது என்பதை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்த மாட்டா. இவற்றின் முதலாளிகள் பெரும்பான்மை இனத்தவர் என்று சொல்லும் சிங்களவர்களாக இருப்பதே இதன் காரணம்.

கொரோனாவை முன்னிறுத்தி ராஜபக்ச குடும்பத்தின் ஒவ்வொருவரும் தனியாகவும் கூட்டாகவும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வாதிகார எதேச்சாதிகாரமாக உள்ளது.

எல்லா நடவடிக்கைகளும் படையினர் வசமாக்கப்பட்டுவிட்டது. கொரோனாச் செயலணியின் தலைவராக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா இயங்குகிறார். இதன் ஆலோசனைக் குழுத்தலைவர் பசில் ராஜபக்ச.

மக்களுக்கான நிவாரண அட்டவணைகளைத் தயாரித்தவர்கள் கிராமசேவகர்கள். ஆனால் தாயக மண்ணில் இவர்களுக்கு உத்தரவிடுபவர்கள் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதிகள். இதனால் தமிழ் பேசும் கிராம சேவகர்கள் அதிருப்தியும் விரக்தியும் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் பணி சவேந்திர சில்வாவின் பணிப்புக்கிணங்க சமுத்தி உத்தியோகஸ்தர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தந்தப் பிரதேச பொதுஜன பெரமுன (மகிந்தவின் கட்சி) பிரமுகர்கள் கையளிக்கும் பெயர்களுக்கே நிவாரணம் கிடைக்கிறது.

அரசாங்க செலவில் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளில் பொதுஜன பெரமுனவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அரச நிதியை ஆளும் தரப்புக் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாமா? கேட்பதற்கு யாருமில்லை.

வடக்கில் மேலும் சில தனிப்படுத்தல் முகாம்களை அமைக்கவும், பயன்படுத்தப்படாதிருக்கும் வயற்காணிகளையும் விவசாய நிலங்களையும் கையகப்படுத்தவும் சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் அங்கு சென்றார். இவர்கள் இருவரும் இலங்கையின் போர்க்குற்றவாளிகள். ஆனால் கோதபாயவின் ஆட்சியின் அரசியல் பீடத்தை அலங்கரிப்பவர்கள்.

விரைவில் வடக்கில் பல நூறு ஏக்கர் காணிகள் ராணுவ வசமாகி அவர்கள் பணமீட்ட உதவுமானால் ஆச்சரியப்பட நேராது. போர்க்காலத்தில் அபகரித்த காணிகளிலிருந்து எஞ்சியவைகளை அபகரிக்க கொரோனா காலத்தை கோதபாய பயன்படுத்துகிறார்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களாக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்களையும், மாவட்ட செயலாளர்களாக (அரசாங்க அதிபர்கள்) ஓய்வு பெற்ற ராணுவ பிரிகேடியர்களையும் நியமிக்குமாறு மகிந்தவின் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் விருப்பத்தை நிறைவேற்றினேன் என்று கூறிக்கொண்டு கோதபாய இந்த வேண்டுகோளை நிறைவேற்ற முன்வரலாம். போர்க்குற்றவாளிகளான பல ராணுவ அதிகாரிகள் அவரின் கூடாரத்துள் இருக்கும்போது ஆள் பஞ்சம் கிடையாதே.

இலங்கையின் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் எப்போது என்ற கேள்வி எழுகிறது. ஐந்து வருட ஆட்சி முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்ததால், யூன் மாதம் 2ம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் தேர்தலை நடத்த முடியாதென்று கூறும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகின்றன. தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை மறுத்து வருகிறார் கோதபாய. இதனை ஒத்தூதுகின்றன மகிந்தவின் கூட்டணியினர்.

தேர்தலை நடத்தும் முடிவு தேர்தல் ஆணையாளருடையதா? சட்டமா அதிபருடையதா? ஜனாதிபதி கோதபாயவினுடையதா என்ற மும்முனைப் போட்டி எழுகிறது. இந்த அதிகாரம் கோதபாயவுக்கே உண்டென்கிறது பொதுஜன பெரமுன கூட்டணி. சிவில் அமைப்புகள் அதனை மறுதலித்து வருகின்றன.

இந்தப் போட்டி தொடருமானால் நாடாளுமன்றத்தைக் கூட்டாது, தேர்தலையும் நடத்தாது முன்னாள் உறுப்பினர்களை வீட்டிலேயே இருக்குமாறு கூறிவிட்டு தனிநபர் ஆட்சியை நடத்த கோதபாய தயங்க மாட்டார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த பத்தாண்டில் கோதபாய தன்னிச்சையாகச் செயற்பட்டு அனுபவப்பட்டவர். இப்போது கொரோனா கோதபாயவுக்கு இன்னொரு வாய்ப்பை - முழுமையான சந்தர்ப்பத்தை அளிக்கப் போகிறது.

அரசாங்கம் என்பது மக்களுக்கானதா? அல்லது ஆளும் தரப்பின் கட்சிகளுக்கானதா? இதற்கு கொரோனா பதில் சொல்லுமா?

No comments