புலம் பெயர்ந்தோர் இழப்பு எமது தமிழ்த் தேசத்தின் இழப்பு! சிவி


எமது புலம் பெயர் உறவுகளில் 25க்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று படித்த போது மனவேதனை
அடைந்தேன் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். இதை விட பலர் ஆயிரக் கணக்கில் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இங்கும் அடையாளம் கண்டுள்ளோம். சுவிற்சர்லாந்தில் இருந்து வந்த ஒரு பாதிரியார் பல தமிழ் மக்களுக்கு கொரோனா வைரசின் தாக்கத்தைப் பகிர்ந்து விட்டுப் பறந்து சென்றுவிட்டார். அவரின் மத ரீதியான கூட்டம் அங்கு வந்த அனைவரையும் தொற்றாளர்களாக்கி இன்று வடமாகாணம் நோய்த் தடுப்புக் காப்புப் பிரதேசமாக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் ஒரு 35 வயதுடைய சீனப் பெண் தென்கொரியா சென்றார். எந்த வித நோயும் அவருக்கு இருக்கவில்லை. தென் கொரியாவில் அவர் ஒரு சிறு விபத்துக்கு உள்ளானார். ஆனால் அதிகப் பாதிப்பு இருக்கவில்லை. மருத்துவர்கள் அவரின் காயங்களுக்குக் கட்டுப் போட்டுவிட்டு அவரின் இரத்தத்தைப் பரிசோதனை செய்ய விழைந்த போது தான் நல்ல திடகாத்திரமாக இருப்பதாகக் கூறி பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். கடந்த பெப்ரவரி 9ந் திகதியும் 16ந் திகதியும் அவர் தென்கொரியாவில் தேவாலயம் ஒன்றிற்குச் சென்றார். அதன் பின்னர் ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போய் ஃபுவே  முறையில் உணவு உண்டார். அவர் பின்னர் கொரோனாவால் பீடிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டார். தேவாலயத்தில் மாத்திரம் 12,000 பேருக்கு அவர் தொற்றைக் கொடுத்திருந்தார். ஹோட்டலிலும் அவர் தொற்றைப் பலருக்குக் கொடுத்திருந்தார். தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட சுமார் 9,000 பேரில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் அதாவது 5,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒரு நோயாளியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டு பிடித்துள்ளார்கள். அப் பெண்ணை தென் கொரிய நோயாளி இலக்கம் 31  என்று அழைக்கின்றார்கள். எனவே இந்த நோயின் பரவல் மிகவும் ஆபத்தானது. பத்து பன்னிரண்டு நாட்கள் சுகதேகிகளாக இருந்துவிட்டு திடீரென்று நோய்க்கு ஆளாவார்கள் அந்த சுகதேகிகள். எமது தமிழ் புலம்பெயர் உறவுகள் குறிப்பிட்ட காலத்தின் போது தம்மைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியத்தை நோயாளி 31ன் கதை வலியுறுத்துகின்றது. 

கடந்த காலத்தில் புலம் பெயர் உறவுகளுடன் எனது தனிப்பட்ட சந்திப்புக்கள் பல இருந்துள்ளன. அவர்கள் எவ்வாறு மிகவும் கஸ்டப்பட்டு உழைத்துத் தம்மையும் தம் குடும்பத்தையும் வெளிநாட்டில் வைத்துக் காப்பாற்றி, பல வங்கிக் கடன் தவணைப் பணங்களையும் கட்டி, தமது வருமானத்தில் ஒரு முக்கிய பகுதியைத் தமது தாயக உறவுகளுக்கு உதவி வந்தார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தேன். ப்ரசல்ஸ் விமான நிலையம், டுபாய் விமான நிலையம், சிங்கப்பூர் விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் போன்ற பல விமான நிலையங்களிலும் விமானத்தை எதிர்பார்த்து இருந்த போது எமது தமிழுறவுகள் அடையாளம் கண்டோ காணாமலோ வந்து என்னுடன் உறவாடுவார்கள். அவர்கள் தம் கஸ்டங்களை ஒரு புறம் மனவேதனையுடனும் அதே நேரம் தாம் தாயகத்திற்குச் செய்யும் உதவிகளைப் பெருமிதத்துடனும் எடுத்துரைப்பார்கள். நீதியரசராகவும், கம்பன் கழகப் பெருந் தலைவராகவும், பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட படங்களின் ஊடாகவும் என்னை அடையாளம் கண்டு வந்து பேசியவர்கள் பலர். தமிழ் பேசுவோருடன் நானாகப் பேச்சுக் கொடுத்து அவர்களுடன் அளவளாவிய சந்திப்புக்களும் பல. 

இச் சந்திப்புக்கள் யாவும் தமிழர்கள் என்ற விருட்சம் எந்தளவுக்கு உலகம் பூராகவும் கிளை விரித்துப் பரந்து வளர்ந்துள்ளது என்பதையும் அந்த விரிந்த விருட்சத்தின் வேர்கள் எம் வடக்கு கிழக்கு மண்ணில் இன்றும் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்பதையும் எனக்கு உணர வைத்தன. அந்த விதத்தில் உலகம் பூராகவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகள் பற்றிய செய்திகள் வடகிழக்கில் பல குடும்பங்களின் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

சில வயதில் கேட்ட ஒரு சினிமா பாட்டு நினைவுக்கு வருகின்றது. “குற்றாலத்திலே இடியிடித்தால் கோயம்புத்தூர் விளக்கணையும்” என்ற வரிகள் அந்தப் பாடலில் வருகின்றன. அமெரிக்காவின் ஒரு கோடியில் வசிப்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி யாழ் நல்லூரிலே எம் மத்தியில் அழுகைச் சத்தங்களைக் கொண்டு வந்துள்ளன.
கொரோனா இறப்புக்களின் தாக்கமும் இங்கு பெருமளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. 

தமிழ் ஈழப் போராட்டத்தின் போது இலட்சணக்கணக்கான எம்மவர் உயிர்கள் பறிக்கப்பட்டன. இங்கிருந்து ஏற்கனவே எழுந்து சென்றவர்களும் எஞ்சியிருந்தவர்களுள் ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்தவர்களும் இன்று அந்தந்த நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற ஒரு புதிய கண்ணுக்குப் புலப்படாத அரக்கனுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

எமது புலம் பெயர் உறவுகளின் உழைப்பும் விடுதலை செயற்பாடுகளும் எந்த அளவுக்கு வடகிழக்கு மக்களிடையே வேரூன்றி இருக்கின்றன என்பது தெரியாத ஒன்றல்ல. எமது தமிழ் அரசியல் கட்சிகளை உள்நாட்டு கொடையாளர்களிலும் பார்க்க புலம் பெயர் உறவுகளே நிதி கொடுத்து நிமிர்த்தி வைத்திருக்கின்றனர். அவர்களின் இழப்பு இங்குள்ள எம் மக்களின் இழப்பே என்று ஊகிப்பதற்கு வெகு நேரம் தேவையில்லை. புலம் பெயர்ந்தோர் இழப்பு எமது தமிழ்த் தேசத்தின் இழப்பு! 
முன்னர் நாம் குடும்பமாக இங்கு வாழ்ந்தோம். இன்று ஒரு மகன் அவுஸ்திரேலியாவில், ஒரு மகள் கனடாவில், இன்னொருவர் டுபாயில் என்று உலகின் கிழக்கு, மேற்கு, மேலும் மத்தியில் எல்லாம் வாழ்கின்றார்கள். அவர்களின் தாயின் புலம்பல்ச் சத்தம் யாழ்ப்பாண வீடொன்றில் இருந்து தான் கேட்கின்றது. இவர் அங்கு செல்லமுடியாது அவர்கள் இங்கு வர முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் கொரோனாவைச் சாட்டி காலனால் கவர்ந்து செல்லப்பட்டால் அவரின் உடல் கூட பார்வைக்கு வைக்காமல் அந்தரங்கமாக எரிக்கப்படும் பரிதாபமே இன்றையநிலை. 
இங்கு இருந்து சென்றவர்களின் இழப்பு அந்தந்தக் குடும்பங்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட இழப்புக்கள் மட்டும் அல்ல. இது வரையில் போரால் பாதிக்கப்பட்ட எம்மவர்களைத் தாங்கிவந்தவர்களின் இழப்பு.
ஆகவே கொரோனா வைரஸ் எம்மை எல்லாம் தட்டி எழுப்ப வந்துள்ளது என்றே நான் காண்கின்றேன். எமது ஆத்மார்த்த உறவு நிலைகளை வலியுறுத்த வந்துள்ளது. வேகங் கெடுத்து ஓய்வில் நிறுத்தி எம்மைச் சிந்திக்க வைக்க வந்துள்ளது. எமது சொந்த பந்தங்களை, தாயக புலம்பெயர் உறவுகளை உணர்த்தி உண்மை நிலையை எமக்கு இடித்துரைக்க வந்துள்ளது. புலம் பெயர் உறவுகள் மரணித்தால் தாயக உறவுகளையும் அது பாதிக்கும் என்ற உண்மையை எமக்கு எடுத்தியம்பியுள்ளது. 
தற்போதைய நெருக்கடி  நிலையைச் சமாளிப்பதும் வருங்கால வாழ்வைப் புதிதாக  வழி அமைத்தலுமே தற்போதைய எமது தலையாய கடன்கள். “நாம் போமளவும் இட்டு உண்டு இரும்” என்று ஒளவையார் கூறியது போல் நாமும் எமது உறவுகளும் கொரோனா வைரஸ் போமளவும் முடியுமானால் மற்றையோருக்கு இட்டு நாம் வீட்டில் இருந்து உண்டு, கொரோனாவின் வெளிப் பயணத்தைத் துரிதப்படுத்துவோமாக!

No comments