அரசுக்கு தேர்தல் அவசரம்:மக்களிற்கோ பட்டினியே மிச்சம்?


மக்கள் இயல்பு வாழ்விற்கு படிப்படியாகவே திரும்ப முடியும். ஆனாலும் அரசாங்கத்திற்கு தேர்தல் அவசரம். ஆனால் மக்களிற்கு வேலைக்கு திரும்பாவிட்டால் சாப்பிடக் கூட முடியாத நிலையென தெரிவித்துள்ளார் சட்டத்தரணி கு.குருபரன்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தொடர்ந்து ஊரடங்கை தக்க வைத்தல் நடைமுறை சாத்தியமல்ல. நிவாரணத்திலும் உதவியிலும் தொடர்ந்து மக்களை தங்கி வாழச் சொல்வது சாத்தியமில்லை. அதே நேரம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் கொரோனோ வைரஸ் இன்னும் சுற்றிக் கொண்டு தான் இருக்கப் போகின்றது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது குறிப்பிடத்தக்களவினருக்கு வழங்கப்பட்ட பின்னர் தான் வைரஸ் முற்றாக அடங்கும்.

ஆகவே ஊரடங்கை தளர்த்தியதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பிலான ஏற்பாடுகள் பின்பற்றப்படாவிட்டால் மீண்டும் வைரஸ்; வீரியமாக பரவ வாய்ப்புண்டு.

ஆனால் சமூக இடைவெளியை எவ்வாறு நாம் நடைமுறையில் பின்பற்றுவது? உதாரணமாக பல்கலைக்கழக விரிவுரைகள் முற்றாக மே 11 ஆரம்பமாகின்ற போது எமது சின்ன நெருக்கமான விரிவுரை மண்டபங்களில் எவ்வாறு சமூக இடைவெளியை பேணப் போகின்றோம்? விடுதிகளில் எவ்வாறு சமூக இடைவெளியை பேணப் போகின்றோம்? இதே போன்று தான் பாடசாலைகளிலும். விடைகள் உண்டா அரசாங்கத்திடம்?

ஊரடங்கு தக்க வைக்கப்பட முடியாதது. ஆனால், பல நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது போல், மறு நாளே சாதாரண வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. மெது மெதுவாக தான் திறக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு நாம் வழமைக்கு திரும்பி விட்டோம் என்று காட்ட அரசாங்கம் துடிக்கிறதா? அடுத்த 6 மாதத்திற்கு - அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது சாதாரணமாக கிடைக்கும் வரை - எவ்வாறு எமது சமூக, பொருளாதார வெளிகளை பாதுகாப்பாக இயங்க வைக்கப் போகிறோம் என்பது பற்றி சிந்தனை தானும் உண்டா அரசாங்கத்திடம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments