கோட்டை விட்டதா பலாலி தனிமைப்படுத்தல் மையம்?


பலாலி இராணுவ தனிமைப்படுத்தல் மையத்தை உரிய வகையில் இயக்க இராணுவம் தவறியதால் அங்கு மேலும் எண்மர் நோய் தொற்றுக்குள்ளானார்களாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய மதபோதகருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட 20 பேர் இராணுவம் வலிந்து உருவாக்கிக்கொண்ட தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஆறு பேர் நோய் தொற்றுடன் கண்டறியப்பட்டு வெளி மாவட்ட விசேட சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.ஏனையோருக்கு நோய் தொற்று கண்டறியப்படவில்லை.

எனினும் அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் போது தற்போது எண்மருக்கு நோய் தொற்றல் கண்டறியப்பட்டுள்ளது.

சுவிஸ் மதபோதகர் நாட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம் கடந்துள்ளது.அவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் தற்போது புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது தனிமைப்படுத்தலை சரியாக முன்னெடுக்காமையாலேயே என அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதிலளிக்கையில் தனக்கு அது தொடர்பற்ற விடயமெனவும் இராணுவமும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுமே பொறுப்பென தெரிவித்தார்.
ஆயினும் அங்கு தனிமைப்படுத்தல் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லையெனவும் கூட்டு பொழுது போக்கு,கார்ட்ஸ் விளையாட்டென இருந்த நிலையில் ஒருவருக்கு இருந்த தொற்று அனைவருக்கும் பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.  
அதிலும் ஒரு மாதத்தின் பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரவலில் தாக்கப்பட்டுள்ளதால் இக்குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது.

No comments