கொழும்பிலிருந்து திருட்டுதனமாக வந்த மேலும் அறுவர்?


கொழும்பில் கோரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வருவதற்கு மூன்று பாரவூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஏற்றி வந்த பொருள்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவது அவசியமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொழும்பிலிருந்து வருகை தந்த கொரேனா நோய் காவி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர்; தொல்புரம் கிழக்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் அறுவர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.இவர்கள் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டவிரோதமாக ஊர் திரும்பியிருக்கின்ற விடயம் சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து அவருடைய வீட்டுக்கு சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் சென்று அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதனால் அந்தக் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இரண்டாம் கட்டமாக சங்கானைக்கு இருவரும் சாவகச்சேரிக்கு நால்வரும் என மேலும் அறுவரும் சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் திரும்பியிருக்கின்றமையும் அம்பலத்துக்கு வந்திருக்கின்றது,

இவர்களில் சங்கானையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் தெல்லிப்பளையில் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments