மக்களிடையே தனிமைப்படுத்தல் முகாம்கள் வேண்டாம்!மக்கள் செறிவுக்கு மத்தியில் உள்ள கோப்பாய் கல்வியல் கல்லுரியில் தனிமைப்படுத்தல் முகாம் அமைவது கொரோனாவை சமூக மயப்படுத்துவது போன்றது எனவே இதனை உடன் படையினர் நிறுத்தவேண்டும்  என  கோப்பாய்    பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

விடுமுறை இரத்தாகி முகாம்களுக்கு மீளத்திரும்பும் படையினரை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக கோப்பாய் கல்வியல் கல்லூரி வளாகத்தினை இராணுவத்தினர் தெரிவு செய்துள்ளனர். அடிப்படையில் மக்கள் செறிவு மிகுந்த பகுதி ஒன்றில் அதிக எண்ணிக்கையானவர்களை தங்க வைத்து சோதனை நடத்துவது தவறான காரியமாகும்.

மனிதர்களிடத்தில் இருந்து மனிதர்களுக்கு நோய் பரவுதலை இலகுவில் கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த பின்னரும் மக்கள் செறிவுள்ள இடமொன்றில் தனிமைப்படுத்தல் நிலையத்தினை அமைப்பது பொறுப்பற்ற செயலாகும்.

கல்வியல் கல்லூரி பகுதி ஏராளமான வீடுகளைக்கொண்ட பகுதியாகும். சிறுவர்கள் முதியவர்கள் என அதிகமானோர்  வாழும் பகுதியாகும். கொரோனாவில் இருந்து சகலரும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதற்குள் கொரோனா பரவாது எவ்வாறு மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க முடியும் என்பது பற்றிதுறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டும்.
துரதிஸ்டவசமாக தொற்று நோய் சம்பந்தப்பட்ட விடயத்தில் மருத்தவத்துறையின் ஆலோசனை பெறாது அரசாங்கம் எதேச்சதிகாரமாக செயற்படுகின்றது.

 மருத்துவத்துறையினர் படையினரின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. அதேவேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிஇ அமைச்சரவைக்கு அடுத்த படியாக அரசியல் தரப்பாக நாமே இருக்கின்றோம். எம்மிடம் இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

படிநிலை சார்ந்த எந்தக்க கட்டமைப்பும் நாட்டில் தேவையில்லை இராணுவ அதிகாரிகள் தனியே முடிவெடுக்க முடியும் என்றால் எதற்காக ஜனநாயகத்திற்காக மக்கள் பணம் செலவிடப்படுகின்றது என்ற கேள்வி உள்ளது. கொரோனாவை காட்டி இரகசியமான முறையில் மக்களின் உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன.

ஊரடங்கு சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அரச நிர்வாகம் மக்களின் அபிப்பிராயம் என்பன மேசமான முறையில் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியல் கல்லூரி வளாகத்தினுள்ளேயே மனைகள் உள்ளன. அவற்றிற்கு மேலாக தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்தாலும் அங்கு தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படுமாயின் இயல்பு நிலையின் பின்பும் மீள ஆசிரிய மாணவர்கள் கல்வி நடவடிக்கைக்கு திரும்பவதில் தடங்கல்கள் ஏற்படும்.

இவ்வாறாக சகல நிலைமைகளையும் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் முகாம்களை மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் அமையுங்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

No comments