இம்முறை கச்சதீவு திருவிழா:கடற்படை திருவிழா?


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இலங்கை கடற்படை விழாவாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, முப்படைகளின் முன்னாள் தளபதி ரியல் அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, பிரசன்னத்தில்  இலங்கை கடற்படை வீரர்கள் அந்தோனியார் ரதத்தை தூக்கியபடி ஆலயத்தை வலம் வந்தனர்.

வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 72 விசைப்படகுகள் மற்றும் 22 நாட்டுப் படகுகளில் 2,570 பக்தர்கள் கச்ச தீவு வந்திருந்தனர். 

திருவிழாவின் பின்னர் கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுமார் 9000 பக்தர்கள் இம்முறை திருவிழாவில் பங்கேற்றததாக கூறினார்.

ராமேஸ்வரம் - கச்சத் தீவு இடையே உள்ள கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினரும், இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை கப்பல்களும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை முதல்,  மன்னார், யாழ்ப்பாணம், நெடுந்தீவு மற்றும் கொழும்பிலிருந்து ஏராளமான பக்தர்கள் படகுகள் மூலம் கச்ச தீவு வந்திருந்தனர். இதையடுத்து அன்று மாலை கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை எமில் பவுல் அந்தோணியார் உருவம்  பொறித்த கொடியை ஏற்றினார்.

அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 14 சிலுவைகள் வழியாகச் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து திருப்பலியும் புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடைபெற்றன. இலங்கை கடற்படை வீரர்கள் அந்தோணியார் ரதத்தை தூக்கியபடி ஆலயத்தை வலம் வந்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற திருவிழா திருப்பலியை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. இதையடுத்து திருவிழா கொடி இறக்கப்பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றது. 

No comments