வேலைக்கு ஆட்களை அழைத்த தொழிற்சாலை; கடும் எதிர்ப்பு

நாட்டில் கொரோனா அச்சம் உள்ள நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை இன்று (20) கடமைக்கு அழைத்தமையால் குழப்பநிலை ஏற்பட்டது.

குறித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை பணிக்கு வருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கடமைக்காக தொழிற்சாலைக்கு வருகைதந்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் கூடிய பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நாட்டில் அவசர நிலை ஒன்று ஏற்பட்டு கொரோனா பீதி குடிகொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு முன்னாயத்த ஏற்பாடுகளை அரசு அறிவித்திருக்கின்றது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்தே பணி புரியும் வாரமாக இன்றிலிருந்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாயமாக பணிக்கு வரவழைத்து பணியில் அமர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சாலை வாயிலை மறித்து ஊழியர்களை உள்ளே செல்லவிடாது தடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதனால் சற்று நேரம் குழப்பகரமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் பணிக்கு வருகைதந்த ஊழியர்கள் மிக நீண்ட நேரமாக வீதியில் நின்ற நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் தொழிற்சாலையின் நிர்வாகத்தினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வரவழைக்கபட்ட ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாகவே பணிக்கு அழைக்கப்பட்டதாகவும் அச்சம் கலந்த சூழலில் வீட்டு வருமானம் பாதிக்கப்படக் கூடாது எனும் நோக்கோடு பணிக்கு வருகைதந்தகாக தன்னிடம் முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாங்கம் அறிவித்ததன்படி எதிர்வரும் 27ம் திகதிவரை ஆடைத் தொழிற்சாலைப் பணிகளை மூடி பணியாளர்களுக்கு வேதனத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அவர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார் .

இதனடிப்படையில் பணிக்காக வந்த பணியாளர்கள் அனைவரும் ஆடைத் தொழிற்சாலைப் பேருந்துகளிலேயே மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments