மரண தண்டனை கைதிகளுடன் அரசியல் கைதிகள் அடைப்பு?


கொரோனா வைரஸ் தாக்கத்தை காரணங்காட்டி தமிழ் அரசியல் கைதிகளை மரணதண்டனை கைதிகளுடன் அடைத்து தனது பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது கோத்தா அரசு.

அனுராதபுரம் சிறையில் தற்போது பதினொரு அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் தம்மை விடுவிக்க கோரி தொடர் உணவு தவிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் சிறைச்சாலை நிர்வாகத்துடன் அவர்களது முரண்பாடு நீடிக்கின்றது.
இந்நிலையில் தற்போதைய கொரோனா பீதியை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறைகளில் கொரோன தாக்கத்தை எதிர்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிங்கள கைதிகளை சேர்த்து தடுத்து வைக்க அதிகாரிகள் முற்பட்டிருந்தனர்.

எனினும் இதற்கு தமிழ் அரசியல் கைதிகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் தம்மை யாழ்ப்பாணம் அல்லது கொழும்பு சிறைகளிற்கு மாற்றம் செய்ய கோரப்பட்டுள்ளது.

எனினும் அதனை கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள் தற்போது அரசியல் கைதிகளினை பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட மரணதண்டனை கைதிகளுடன் சேர்த்து அடைத்துள்ளனர்.

சுமார் பதினொரு மரண தண்டனை கைதிகள் அனுராதபுரம் சிறையிலுள்ள நிலையில் அவர்களுடன் தமிழ் அரசியல் கைதிகளும் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை கொலை அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக பாரிய கொலைகள்,பெருமெடுப்பிலான போதைபொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்ட மரண தண்டனை கைதிகளே அனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments