வட. சுகாதார பணிப்பாளரை மிரட்டிய பொலிஸ்?

யாழ்ப்பாணம் - அரியாலையில் உள்ள பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்தமை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வடமாகாண சுகாதார பணிமனையின் நேற்று (22) காலை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"பிலதெனியா ஆலயத்தில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகரால் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மிரட்டப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை வெளியிட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கியமைக்காக நாங்கள் உங்களைக் கைது செய்வோம் என்று எச்சரித்துள்ளனர்" இவ்வாறு பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விளக்கமளிக்கையில்,

"அரியாலை சம்பவம் தொடர்பில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தேவாலயத்தின் பாஸ்டருடன் பேசினேன். சுவிசில் இருந்து வந்து சென்ற பாஸ்டர் ஒருவர் கொரோனா சந்தேகம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

அதனை விட அவரது நண்பர்கள் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிலிருந்து அவர் மீள்வதற்கு பிரார்த்திக்குமாறு கூறினர்.

இது தொடர்பில் எங்களது அதிகாரிகள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் என்னுடன் கலந்துரையாடினர். பாஸ்டர் நடத்திய ஆராதனை கூட்டத்திற்கு சென்றவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடினேன். ஆராதனைக்கு சென்றவர்கள் விவரங்களை பதிவு செய்ய 'ஹொட்லைன்' இலக்கம் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள் இல்லாமையால் காணொளி ஊடாக அதனை வழங்கினேன்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னை தொடர்பு கொண்டு சுவிஸ் பாஸ்டருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்று கேட்டார். எந்த அடிப்படையில் அந்த தகவல் வழங்கப்பட்டது என்று என்னிடம் கேட்டார். தென் கொரியாவிலும் இதுபோன்று தேவாலயத்திலிருந்தே கொரோனா நோய் பரவியது. அந்த அடிப்படைகளை வைத்தே முன்னாயத்த நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம்" என்று குறிப்பிட்டார்.

No comments