விஷமத்தால் அரங்கேறிய அநியாயம்!

புதுக்குடியிருப்பில் செல்வபாக்கியம் பண்ணையின் மூன்று வைக்கோல் பட்டறைகள் நேற்று (27) விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

அவற்றின் பெறுமதி ஒரு இலட்சத்து ஏழாயிரம் என உரிமையாளர் தெரிவித்தார். 

முன்னாள் போராளிகளான நேசனும் அவர் மனைவியும் கடந்த ஆறு வருடங்களாக பண்ணையினை திறம்பட நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி புதுக்குடியிருப்பில் உள்ள பண்ணையின் உரிமையாளரான செல்வநேசன் நேற்று 10.30  மணியளவில் மாட்டு தீவனங்களான கடலைப்பருப்புக் கோது, உளுத்தங்கோது, தவிடு போன்றவற்றை கொள்வனவு செய்ய புதுக்குடியிருப்புக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் 11.20 மணியளவில் வைக்கோல் பட்டறை எரிந்து கொண்டிருப்பதாக அவரது மனைவி தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் திரும்பி வந்து பார்த்த போது தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. தீ வீட்டுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிராம சேவையாளருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் இரவு 9.30 மணிவரை சென்று பார்க்கவில்லை.

No comments