வைரஸை இலவசமாக கொடுத்துவிடாதீர்கள்!

எவ்வளவுதான் அறிவுரை  வழங்கினாலும் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்வேளைகளில், 'கொரோனா'வுக்கு பொட்டு வைத்து, பூமாலை போட்டு ஆரத்தி எடுத்து - தமது உடலுக்குள் வரவேற்கும் வகையிலேயே சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், யமனுக்கு காவடி எடுத்து வலம்வருவதுபோன்றே பொது இடங்களில் சிலர் முட்டிமோதிக்கொள்கின்றனர்.

மக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்பட்சத்திலேயே, பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறும், வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும்.

இதைவிடுத்து பொறுப்பு, பொதுநலன் மறந்து, தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அடுத்துவரும் நாட்கள் மிக முக்கிய காலப்பகுதியாகும். எனவே, விழிப்பாக இருங்கள், விலகி இருங்கள், வீட்டுக்குள் இருங்கள் என்று ஈ.பி.எஸ். பாணியில்தான் கூறவேண்டும்.

வாழு, வாழவிடு என்பதற்கிணங்க பணம் உள்ளவர்கள் ஒரே தடவையில் பொருட்களை வாங்கி குவிக்காமல் அடுத்தவர்கள் பற்றியும் சிந்திக்கவும். இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்துதவி மரணித்துபோயுள்ள மனிதாபிமானத்துக்கு உயிர்கொடுப்பதற்கு ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது....

அதற்காக 'வைரஸை' இலவசமாக கொடுத்துவிடாதீர்கள். அதனை கட்டுப்படுத்த ஒத்துழைத்து வாழ்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

No comments