ஏன் சி.வி:இளைஞன் ஒருவனது மனப்பதிவு!


நாம் எதற்காக மாண்புமிகு நீதியரசர் - முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களை ஆதரிக்கின்றோம் என இளைஞன் ஒருவன் ஊடகங்களிற்கு பகிர்ந்துள்ள மனப்பதிவில்,
நாம் எப்போதுமே தனிநபர்களுக்காக எந்த கட்சியையும் ஆதரித்ததில்லை. கொள்கைகளுக்காகவே கட்சிகளை ஆதரிக்கின்றோம்.
2009இன் பின்னரான அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து எமது வாக்குகளால் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற கதிரைகளால் தம்மை அலங்கரித்துக்கொண்டவர்கள் எமது அபிலாசைகளையும் உணர்வுகளையும் பாராளுமன்றில் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதும், தொடர்ந்து நல்லாட்சிக்கு நிபந்தனைகளற்று எவ்வாறு முட்டுக்கொடுத்தார்கள் என்பதும் சொல்லி தெரியவேண்டிய விடயமல்ல.
அதற்கும் மேலாக, ஒவ்வொரு தேர்தல்கள் வருகின்ற போதும் மாவீரர் புகழ் பாடுவதும் விளக்கேற்றுவதும், அதன் பின்னர் எல்லாவற்றையும் மறந்து அறிக்கைகளை வெளியிடுவதும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதும் நாம் கண்ட நிஜங்கள். சட்ட புலமைகளும் அரசியல் சாணக்கியங்களும்(?) தமது சுய இருப்பினை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயே பிரயோகமாவதும் யாவரும் அறிந்ததே.
அந்த அரசியல் தலைமைகளுக்கு மாவீரர்கள் யாரோவாக இருக்கலாம். ஆனால் எமக்கு அவர்கள் சக உதரங்கள், உறவுகள், தோழர்கள், தோழிகள்…
இழந்தவர்களுக்கே இழப்புகளின் வலிகள் புரியும்.
அவர்களது அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் கொடைகளும் தனித்து வாக்கு சேகரிக்க மட்டும் அற்பத்தனமாக பயன்படுத்தப்படுவது சகிக்க முடியவில்லை.
அடுத்து “முள்ளிவாய்க்கால்”…
அது இப்போது விளக்கேற்றும் அரசியல் செய்யும் தளமாகிவிட்டது.
2009இல் இதே முள்ளிவாய்க்காலில் நாம் அவலங்களை சுமந்து நின்றபோது, அந்நேரத்தில் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களாக இருந்த எந்த தமிழ் அரசியல் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களும் பேரவலத்துக்காக தமது பாராளுமன்ற பதவிகளை தியாகம் செய்திருக்கவில்லை. அப்படியொருவர் செய்திருப்பின் இன்றுவரை நன்றிக்காக பின்தொடர்ந்திருப்போம். சரி, அதுவாவது போகட்டும். அதன் பின்னரான தேர்தலில் தெரிவாகிய போதாவது வாக்களித்த மக்களுக்கும் எமது வரலாற்று தியாகங்களுக்கும் நேர்மையாக செயற்பட்டிருப்பின் அதற்காகவாவது போற்றி பின்தொடர்ந்திருப்போம் அதுவும் நடக்கவில்லை…
எதுவுமே நிகழவில்லை…
எதுவுமே மாறவில்லை…

தேர்தலில் எவர் எந்த பதவிக்கு தெரிவானாலும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுத்தர முனைந்தால் அது எவ்வளவு சவாலானது என்பதை நாம் நன்கு அறிவோம். எவராக இருப்பினும் பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 64இற்கு அமைவாக,
"………………………….ஆகிய நான் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பை போற்றி பாதுகாப்பேன் என்று பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் / சத்தியம் செய்கிறேன்"
என்ற பிரகடனத்தை மொழிந்து ஒப்பமிடாமல் பாராளுமன்றத்தில் அமரவே முடியாது. அதாவது ஒற்றையாட்சி அரசியலமைப்பை போற்றி பாதுகாப்பேன் என்று பயபக்தியுடன் வெளிப்படுத்தி சத்தியம் செய்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் அமர முடியும்.
இதுவே ஜதார்த்தம்.
இதுவே அரசியல் நிலை.

எதையுமே நாம் ஜதார்த்தத்தின் வழியில் அணுகாமல் உசுப்பேற்றல் அரசியலை செய்ய முடியாது. இந்த ஜதார்த்தங்களின் வழியில் சாத்தியமான வகையில் எமது உரிமைகளுக்கான, எமது நீதிக்கான ஒரு நேர்மையான குரலையே நாம் வேண்டி நிற்கிறோம். நேர்மையான அரசியலே எமக்கு தேவை.
நாம் கடந்து வந்த பாதைகள்…
சுமந்து வந்த தாகங்கள்…
கொடுத்துவந்த விலைகள்…
அனைத்தையும் மனதிருத்தி, அந்த வரலாறுகளையும் தாகங்களையும் விலைகளையும் மதிப்புணர்ந்து, அவற்றை வீணடிக்காமல், எமது உணர்வுகளின் குரலாகவும், எமது தாகத்தை வெளிப்படுத்துவதாகவும் ஒலிக்கின்ற ஒரு குரலையே நாம் வேண்டி நிற்கிறோம்.

ஐயாவை அரசியலுக்கு அழைத்து வந்தவர்கள் கண்ட கனவு ஒரு "பொம்மலாட்ட பொம்மை".
ஐயா தனக்காக வாக்களித்த மக்களுக்கு நேர்மையாக செயற்பட அது "அழைத்து வந்தவர்களுக்கு" சிம்ம சொப்பனமாகியது.
ஐயா மக்களுக்கு நேர்மையாக செயற்பட்டதே அழைத்து வந்தவர்களுக்கு வில்லங்கமாகியது. போற்றிய வாய்கள் தூற்ற தொடங்கின.

மதிப்பிற்குரிய ஐயாவின் குரல் எமது உணர்வுகளை பிரதிபலிக்கும் குரலாக நாம் காண்கின்றோம்!
அவரின் நேர்மைக்கே நாம் தலை வணங்குகின்றோம்!
அவரின் தற்துணிப்பையே நாம் போற்றுகிறோம்!
அவரின் வெளிப்படை தன்மையையே நாம் மதிக்கின்றோம்!
அவரின் மண்டியிடாத வலிமையையே நாம் வரவேற்கின்றோம்!

தீர்க்கமான பேச்சு…
எளிமையான இயல்பு…
அன்பான அரவணைப்பு…
தராதரங்கள் பாராத தன்னடக்கம்…
-இவற்றின் மொத்த வடிவமே மாண்புமிகு நீதியரசர் - முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள்.
அதனாலேயே நாம் ஐயாவை பின்பற்றுகின்றோம்!
ஆதரிக்கின்றோம்!!
வழிநடக்கின்றோம்!!!

No comments