கைதானவர் சுற்றுச்சூழல் பாதுகாவலர்?


வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் 4ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக போராடியவர் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை நீதிமன்றில் முற்படுத்தாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரை சுண்டிக்குளம் பகுதிக்கு ஆயுதங்கள் இருப்பதாக அழைத்து வந்து தேடுதலில் ஈடுபட்டபோதும் எதுவுமே மீட்கப்படவில்லை.

கேவில் கிராமத்தில் மணல் , மரம் கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக செயல்பட்ட செல்வலாசா - உதயசிவம் வயது 39 என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குடுல்பஸ்தரிடம் ஆயுதங்கள் இருப்பதனாலேயே கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடற்றொழில் புரியும் அதேநேரம் இப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓர் தனியார் தொலைத் தொடர்பு நிலைய பரிவர்த்தனைக் கோபுரக் காப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இப் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்து வந்தவர் முன்னிலையில் அவரது வாடி அமைந்துள்ள பிரதேசம் மற்றும் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதிகளில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது தகவல் அறிந்த குடும்பஸ்தவர்கள் அந்த இடத்திற்குச் சென்ற போதிலும் பார்வையிடவோ அல்லது உரையாடவோ அனுமதிக்கப்படவில்லை. 

No comments