சமஸ்டி யாரிடம்: சி.வி கேள்வி?


ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மறுதலித்துள்ளார்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்று தான் ஜீ.ஜீ. கூறிவந்தார்.அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சியே. அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் கேட்பது சமஸ்டி. அது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொரு கரவான இணக்கப்பாடு இருக்கவேண்டும்.

நாங்கள் மத்திய அரசாங்கங்களுடன் கரவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா?

அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னணி; இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம்.

எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து முன்னணியினரை பயணிக்கச் சொல்லுங்கள் என சி.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments