தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுத்ததுதான் 100 நாள் சாதனையா

காணாமல் ஆக்கப்பட்டோரை மண்ணைத்தொண்டி பாருங்கள் என்று ஜனாதிபதி சாட்சியம் கூறுகின்றார், அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் மண்ணைத் தோண்டிப் பாருங்கள் என அழுங்கட்சியின் முக்கியஸ்தர் விமல் வீரவன்ச கூறுகின்றார். இதுவா ஆட்சியமைத்த 100 நாட்களில் நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்த சாதனை? என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற மட்டக்களப்பு - நெடியமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். மேலும்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொதுஜன பெரமுன கட்சியின் பக்கம் தாவிச்சென்ற ஒருவர் கூறுகின்றார். கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு 4 வருடமாக செய்யாததை தமது அரசாங்கம் 100 நாட்களில் செய்து சாதனை படைத்துள்ளதாக. 

உண்மையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் இந்த அரசாங்கம் 100 நாட்களில் தந்த வேதனைகள் என்ன என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும், தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை, தேசிய பொங்கல் நிகழ்வை கொண்டாட அனுமதிக்கவில்லை. காணமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள். தேவையெனில் மண்ணைத் தொண்டிப்பாருங்கள் என்கின்றார்கள். 

அதேபோல் அப்பாவித் தமிழ் மக்களைக் சித்திரவதை செய்து கொன்றொழித்த செயலுக்காக தீர்ப்பளிக்கப்பட்டு தண்டைனை பெற்றுவந்த இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றிய பல நேர்மையான அரச அதிகாரிகள் அரசியல் தலையீடுகளினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், நிர்வாகப் பதவிகளில் இராணுவத்தினர் அமர்த்தப்பட்டுள்ளார்கள், நிர்வாக கடமைகளில் அனாவசிய இராணுவ தலையீடுகள். தேசிய கல்வி ஆணைக்குழுவில் பெரும்பான்மை இனத்தவர்கள் மாத்திரம் தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

மேலும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் வாபஸ்வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ் இனத்திற்கு எதிராக பல செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வேதனைகளை எமக்கு தந்துவிட்டு வெட்கம் இன்றிக் கூறித்திரிகின்றார்கள் சாதனை படைத்து விட்டதாக. 

அண்மையில், பொதுஜனப் பெரமுன அறிவித்துள்ளது தாம் வடக்கு கிழக்கில் தாங்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று, அப்படியாயின் இவர்கள் தென்பகுதிகளில் பிரச்சாரம் செய்யப் போகின்றார்கள் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தமக்கு தேவையில்லை, பெரும்பான்மையினரின் வாக்குகள் தான் தேவை அதனால்தான் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லை என்று ஆனால் மறைமுகமாக வடக்கு கிழக்கில் உள்ள சில்லறைக் கட்சிகளை களமிறக்கி தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து ஆசனங்களைக் கைப்பற்றும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். 

இதற்காகவே அவசரமாக அவசரமாக ஆனந்தசங்கரி ஐயாவின் சூரியன் சின்னம் மாத வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூரியன் சின்னத்தினை பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தான் முன்பு வடக்கு தலைமைகளை நம்பமடியாது எனக் கூறி கிழக்கு தமிழர் கூட்டமைப்பினை உருவாக்கியவர்கள். 

தற்போது அதை மறந்து தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக ஆனந்த சங்கரி ஐயாவிடம் சரணாகதியாகியுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் யோக்கியத்தினை இழந்தவர்கள். தற்போது மீண்டும் மொட்டு சின்னத்திற்காக சூரியன் முகமூடியினை அணிந்து வரப்போகின்றார்கள். இதற்குப் பின்னர் வரும் தேர்தல்களில் என்ன சின்னத்தில் வரப்போகின்றார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது மக்கள் இவர்களை நன்றாகவே இனங்கண்டு வைத்துள்ளார்கள். என தெரிவித்தார்.

No comments