வலி.வடக்கில் இராணுவ காலனித்துவத்தை பேண முயற்சி?


வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முற்றான கைவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான புதிய விளக்கமாக வலிகாமம் வடக்கினை சேர்ந்த காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர் என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய புதிய விளக்கமளித்துள்ளார்.அத்துடன் விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீளகுடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பொதுமக்களின் காணிகளை விடுவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், வீடுகளை அமைத்து கொடுக்கவும் இராணுவம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்ந்து வாழ்வதற்கு காணி உரிமையாளர்கள் அக்கறை இல்லாது காணப்படுவதாகவும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இதுவரையான காலப்பகுதியில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டு இராணுவத்தினரின் பாவனையில் இருந்து 8,800 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் 4,770 ஏக்கர் காணிகளுக்கு உரிமையாளர்கள் இல்லாத நிலையில் அவை தொடர்ந்தும் மக்கள் பயன்படுத்தாத நிலையில் அக்காணிகள் பற்றைகாடுகளாக காணப்படுகின்றன.

காணிகளை விடுவிக்குமாறு போராட்டங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் மீள குடியமர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என கவலை தெரிவித்தார்.

குறிப்பாக 4,770 ஏக்கர் காணி தொடர்ந்தும் காடும், பற்றைகளுமாக கவனிப்பாரற்றும் காணப்படுகிறது.ஆனால் காணி உரிமையாளர்கள் வந்து மீளக்குடியமரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நான் நினைக்கின்றேன் காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். விடுவிக்கப்பட்;ட காணிகளில் மக்கள் மீளகுடியமரும் இடத்து இராணுவம் பல்வேறு உதவிகளை வழங்க தயாராக உள்ளது என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

ஆயினும் இதனை முற்றாக நிராகரித்துள்ள வலிகாமம் வடக்கு மக்கள் விடுவிப்பென்ற பெயரில் இராணுவ காலனித்துவத்தை பேண அரச படைகள் முற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்தின் மத்தியில் மக்கள் மீள்குடியமர்வு சாத்தியமில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments