சிங்களம் சரணம் கச்சாமி! சர்வமும் ராணுவம் கச்சாமி! பனங்காட்டான்

தனிச்சிங்களத்தில் தேசிய கீதம். வெள்ளை உடையில் ராணுவப் பதக்கங்களுடன் சிங்கக்கொடியேற்றம். பௌத்த தத்துவத்தை
பாதுகாப்பதும் வளர்ப்பதும் தனது கடமையென மேடை முழக்கம். இதுதான் சிங்கள பௌத்த தேசத்தின் முடிவென்றால், தாயக தேசிய கவிஞன் புதுவை இரத்தினதுரையின் - நீங்க வேறு நாடையா! நாங்க வேறு நாடு - என்ற பாடலை இனிவரும் சுதந்திர தின நாட்களில் தமிழரின் கீதமாக்கி கறுப்புக் கொடி ஏந்துவதுதான் ஒரே வழி.

'இலங்கையுள் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமையுண்டு. அவர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் உரிமையையும், சுயாதீனமாக அபிப்பிராயம் கொள்ளும் உரிமை போன்று கருத்துகளை தெரிவிக்கும் உரிமையையும் நாம் எப்போதும் உறுதி செய்வோம்......

எந்த ஒரு பிரஜைக்கும் தாம் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கு உள்ள உரிமையை நாம் எப்பொழுதும் மதிப்போம். அமைதியான ஒன்றுகூடலுக்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. ஒருவர் தாம் தெரிவு செய்து கொள்ளும் பிரதிநிதிகள் ஊடாக அரசியல் செயற்பாட்டிலும், அரச நிர்வாகத்திலும் சம்பந்தப்படும் உரிமையை நாம் எப்பொழுதும் பாதுகாப்போம்"

இப்படியாக யார் எங்கே கூறினார் என்று சொல்ல முடியுமா? அவர் பெயரைச் சொன்னால் நம்ப முடியாது. ஆனால், அவர் பகிரங்கமாக இதைச் சொன்னார்.

எழுபத்தைந்து நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோதபாய ராஜபக்சவே இந்தக் கூற்றின் சொந்தக்காரர். முன்னாள் இராணுவ அதிகாரியாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த இவர், இலங்கையின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கும் ஒருவராக தம்மைக் காட்டிக் கொள்ள மிகப் பிரயத்தனத்துடன் வாசித்த உரை இது.

கடந்த நான்காம் திகதி கொழும்புப் பெருநகரில் இடம்பெற்ற தனிச்சிங்கள சுதந்திர தின நிகழ்வில் கோதபாய ராஜபக்ச இந்த உரையை நிகழ்த்தி, சர்வதேசத்தின் தலையை முழுமையாக கழுவ முனைந்தார் என்பதே இதன் உண்மை.

இதை நிரூபிக்கும் வகையில் அதே நிகழ்வில் அவர் நிகழ்த்திய உரையின் இன்னொரு பகுதி இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அது இதுதான்:

'இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக நாடு. எனது ஆட்சிக்காலத்தில் இந்நாட்டின் பௌத்த தத்துவத்தைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்" என்பதுவே அவரது உரையின் சுருக்கம்.

இதனூடாகப் பார்க்கக்கூடிய சமாசாரம் என்னவெனில், சிறுபான்மை மக்களை பேய்க்காட்டி, உலக நாடுகளுக்கு தமது சமத்துவமான செயற்பாட்டை எடுத்துக்காட்ட ஒரு பகுதியையும், தன்னை ஆட்சிபீடம் ஏற்றிய சிங்கள பௌத்த மக்களுக்கு இனரீதியான உத்தரவாதம் வழங்குவதை நிரூபிக்க இன்னொரு பகுதியையும் தமது உரையில் மிகப்புத்திசாலித்தனமாக (?) கோதபாய முயன்;றுள்ளது பளிச்செனத் தெரிகிறது.

கோதபாயவின் சிந்தனை ஓட்டத்தை பூரணமாகப் புரிந்த இந்த உரையின் மூலவருக்கு (தயாரிப்பாளர்) நிச்சயம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். அறிவுபூர்வமாகவன்றி உணர்வுபூர்வமாக இலங்கையின் சுதந்திர நாளை கோதபாய சுவைத்துள்ளார்.

இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு தடவை லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், எனது மக்களுக்காக நான் எதனையும் செய்வேன். தமிழர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்ற சாரப்பட்ட தெரிவித்த கருத்தை இலகுவில் மறந்துவிட முடியாது.

அதேபாணியில், கோதபாய தமது வெற்றிக்களிப்பு உரையின்போது சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால்தான் தாம் வெற்றியீட்டியதாகக் கூறியதையும், அதன் வழியில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் பார்க்க முடிகிறது.

இலங்கை பல்வேறு இன மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து, இங்கு தமிழும் ஓர் உத்தியோகபூர்வ மொழி என்பதையும் நினைவில் கொள்ளாது இவர் ஆற்றிய உரை எத்திசை நோக்கி நாடு செல்கிறது என்பதை அவரது முதல் நூறு நாட்களுக்குள்ளேயே அடையாளம் காட்டுகிறது.

எனது ஆட்சிக்காலத்தில் என்ற ஆணவத்தொனியும், தமது மதமான பௌத்தத்தை மட்டுமே பாதுகாப்பேன் வளர்ப்பேன் என்ற அகங்கார அறிவிப்பும் இத்தீவில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழர் தாயகத்தில் ஆயிரம் விகாரைகளை அமைப்பேன் என்று கூறியதையும், அப்பணிகளை கலாசார திணைக்களத்துக்குப் பொறுப்பாகவிருந்த சஜித் பிரேமதாச அமைதியாக நிறைவேற்ற ஆரம்பித்ததையும், கோதபாய பாதுகாத்து வளர்க்க விரும்புவதை அவரது உரை கோடு காட்டி பளிச்சென தெரிய வைக்கிறது. இதற்காக சிங்கள் குடியேற்றங்களையும் பௌத்த வழிபாட்டுத் தலங்களையும் தமிழர் தாயக பூமியில் அவர் உருவாக்க இருப்பதே அவர் விரும்பும் ஜனநாயக பாதை.

ஜனாதிபதியான பின்னர் வெள்ளைச் சட்டையுடன் மேடைகளில் தோன்றி உபதேசம் செய்யும் இவரே, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் போராளிகளை கொலை செய்யுமாறு உத்தரவிட்டாரென்று அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாகக் கூறியதற்கு இன்றும் நேர்மையான பதில் இல்லை.

இலங்கையின் வரலாற்றில் அந்நாட்டின் தலைவர் ஒருவர் சுதந்திர தின விழாவில் முதன்முறையாக தமது மேலாடையில் இராணுவப் பதக்கங்களை அணிந்து தோன்றினார் என்றால் அதன் உள்நோக்கும் புறநோக்கும் என்ன?

மெல்ல மெல்ல இலங்கை இராணுவ ஆட்சிக்குள் தன்னைப் புகுத்திக் கொள்கிறது என்று அர்த்தம் கொள்ளலாமா?

அதுதான் உண்மை என்பதுபோல தனிச்சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. வாளேந்தும் சிங்கக்கொடி சுதந்திர தினத்துக்கு ஏற்றப்படுகிறது. இவைகளைப் பார்க்கும்போது தமிழீழத் தேசிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் - ஷநீங்க வேறு நாடையா! நாங்க வேறு நாடு| என்ற பாடல் யதார்த்தமானதாகத் தெரிகிறது. முடிந்தால் இனிவரும் இலங்கையின் சுதந்திர தின நாட்களில் தாயகத் தமிழர்கள் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு கறுப்புக்கொடி ஏற்றலாம். இதுவே மிகமிகப் பொருத்தமான கீதமாக அமையக்கூடும்.

இலங்கையில் ஒருபோதும் ராணுவ ஆட்சி ஏற்படாது என்ற கோதபாயவின் கூற்றுக்கு எதிர்மாறாகவே எல்லாம் நடைபெறுகின்றன.

இதுவரை 47க்கும் அதிகமான முன்னாள் படைத்துறையினர் முக்கியமான பதவிகளுக்கு நியமனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் கொழும்பை மையமாகக் கொண்ட அரசாங்க பதவிகள்.

திருமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் றுவான் குலத்துங்க இவ்வாரம் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா அரசாங்க அதிபராகவுமிருந்த முஸ்லிம் சமூகத்தவர் திடீரென கொழும்புக்கு மாற்றப்பட்டு சிங்களவர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் தலைவராக முதன்முறையாக ஒரு சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களின் பின்னர் நடைபெறப்போகும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர், தமிழர் தாயகத்தின் மற்றைய மாவட்டங்களுக்கும்கூட சிங்களவர்கள் அரசாங்க அதிபர்களாகவும், நிர்வாகத் தலைமை அதிகாரிகளாகவும் நியமனமானாலும் ஆச்சரியப்பட நேராது.

இவ்வருட சுதந்திர தினத்துக்கு விசேட பிரமுகராக ர~;யாவின் தரைப்படை பிரதம தளபதி ஒலக் சலிக்கோ கலந்து கொண்டார். இதற்கு முன்னர் எந்தவொரு சுதந்திர தின விழாவிலும் இத்தகைய ராணுவ அதிகாரியொருவர் இவ்வாறு கலந்து கொள்ளவில்லையென கொழும்பின் ஐலன்ட் பத்திரிகை சுட்டியுள்ளது. இவர் ஒருநாள் கோதபாயவுடன் ரகசிய பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார்.

இந்தச் சுதந்திர தின விழாவில் ஆறாயிரத்துக்கும் அதிகமான படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. இவர்களுள் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானோர் இலங்கை ராணுவத்தின் சிங்ஹ, ஜெமுனு, கஜப, விஜய படையணிகளைச் சேர்ந்தவர்கள். நூற்றியைம்பது ராணுவ வண்டிகள் வீதிகளில் ஊர்வலம் வந்து ராணுவ வளர்ச்சியை எடுத்துக் காட்டின.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி முஜாமிட் அன்வர்கான் மேலும் சில மூத்த அதிகாரிகளுடன் ஆறாம் திகதி கொழும்பு சென்றுள்ளார். சீனாவில் கொறொனா உயிர்பறிக்கும் நோய் ஏற்பட்டிராவிடில் சீனாவின் படைத்தளபதியும்கூட இவ்வாரம் கொழும்பு சென்றிருக்கக்கூடும்.

இலங்கை அரச சேவையில் நிர்வாக சேவையின் முதலாம் இரண்டாம் தர அதிகாரிகள் பலர் இருந்தும் அவர்கள் பதவிகளுக்கு படைத்தரப்பினரை கோதபாய நியமித்து வருகிறார். படைத்துறை அதிகாரிகளால் மட்டுமே ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியுமென்ற கோதபாயவின் கூற்று நிர்வாகத்துறை அதிகாரிகளை அதிர்வடையச் செய்துள்ளது.

முற்றுமுழுதாக இலங்கையின் நிர்வாக அலகு ராணுவ மயமாகப் போவதை அனுமானிக்க முடிகிறது. இவ்வகையான எண்ண ஓட்டமானது இலங்கையை சோசலிஸ ராணுவக் குடியரசாக மாற்றிவிடலாம் என்பதே பலரின் பொதுப்படையான கருத்து.

இவ்விடயத்தில் ஜனாதிபதி தம்மை இப்பதவிக்குக் கொண்டு வந்த தமது கட்சியினரைக்கூட மதிப்பவராகக் காணப்படவில்லை. ஆறு கடந்தபின் அண்ணன் என்னடா, தம்பி என்னடா என்ற நிலை இவ்வருடப் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் குரக்கன் சால்வை குடும்பத்துள் குழப்பத்தை ஏற்படுத்தும் சாத்தியம் தெரிகிறது.

அழகான இந்து சமுத்திரத் தீவு, நாயுடன் படுத்தால் மிஞ்சும் உண்ணியாகப் போகிறது.

No comments