வலி.வடக்கினை விடுவிக்காதிருக்க சப்பைக்கட்டு?


வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயர்ந்து நீண்டகாலமாக முகாம்களிலுள்ள மக்களின் காணிகளை விடுத்து மீள்குடியமர்வதற்குரிய அனைத்த வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனக் வலிவடக்கு மீள்குடியேற்ற குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மீள்குடியமர இடம்பெயர்ந்த மக்கள் இடையே ஆர்வம் இல்லை என்ற யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியின் கருத்தையும் குழு நிராகரித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் வலிவடக்கு மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் யுத்தத்தின் காரணமாக வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போதும் முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இரானுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள அந்த மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென பல்வெறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் குறிப்பிட்டளவு காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியமர்ந்து வருகின்றனர். ஆனால் குடியமர்வதற்கான முழுமையான வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலைமையே இருக்கின்றது.

ஆனாலும் மக்கள் பலரும் அந்தக் காணிகளில் குடியமர்ந்துள்ளனர். இவ்வாறான நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியமர்வதில் மக்கள் ஆர்வமில்லை என யாழ் மாவட்ட இரர்னுவத் தளபதி கூறியிருக்கின்றார். அவருடைய கூற்று ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. ஏனெனில் தமது சொந்த நிலங்களில் குடியமர்வதில் மக்கள் அக்கறையுடனேயே செயற்பட்டு குடியமர்ந்து வருகின்ற நிலைமையே காணப்படுகிறது.

ஏற்கனவே ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. ஆகையினால் அவற்றையும் விடுவித்து மக்களை மிள்குடியமர்த்துமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

எனவே காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளை இந்த நாடாளுமன்றம் கலைவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராடுகின்ற நிலைமையும் காணப்படுகிறது.
ஆகையினால் படையினர் வசமிருக்கும் பொது மக்கள் காணிகளை விடுத்து அவர்களை மீளக் குடியமர்த்தி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் எனவும் ச.சஜீபன் தெரிவித்தார்.

No comments