பல்கலை மாணவர்களின் பாலியல் சேட்டை ; விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பகிடி வதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.

அண்மையில் கிளிநொச்சியில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்ட போதே இந்த விடயம் அறியக்கிடைத்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் பலர் செய்த முறைப்பாடுகளையடுத்து, இது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பல்கலைக் கழக நிர்வாகம் பகிடிவதைக்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையைப் பெற்றோர் மத்தியில் ஊட்டும் வகையிலும் யாழ். பல்கலைக் கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமியின் அறிவுறுத்தல்களுக்கமைய விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்றும்,

குறித்த திட்டம் பற்றி பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நாளை 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்.

இது குறித்த நிலைமைகளை ஆராய்வதற்கென உயர் கல்வி அமைச்சர்  பந்துல குணவர்த்தன தலைமையில் அடுத்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு வரவுள்ள அதிகாரிகள் குழுவினருடன், வடக்கு மாகாண ஆளுநரும் இணைந்து கொள்ளவுள்ளார்.

No comments