பாலியல் சேட்டையாக மாறிய பகிடிவதை; ஆளுநர் விடுத்த உத்தரவு

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளுநரின் ஊடகப்பிரிவு இன்று (06) இரவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கை வருமாறு,

இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில் அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும்இ கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வட மாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும்.

ஆறநெறிப்பட்ட பண்பாட்டுச் சூழல் நிலவுகின்ற இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் மாகாணத்தின் பண்பாட்டுப் பிறழ்வினையும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பின்தங்கி இருக்கும் நிலையினையும் ஏற்படுத்தும்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவியிடம் தொலைபேசி மூலம் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பகிடிவதை மேற்கொண்டவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறன துன்பியல் சம்பவங்கள் நிகழாது தடுக்கும் முகமாகவும் வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் விசேட கவனத்தின் கீழ் உடனடியாக பணிக்கப்பட்டதற்கு அமைவாக நாளை (07.02.2020) காலை 10.00 மணியளவில் கூடவுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் மேற்படி சம்பவத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது பற்றி கலந்துரையாட உள்ளனர்.

No comments