இருகொலைகள்:அதிரும் வடகிழக்கு?


வன்னியின் மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள்; தெரிவித்துள்ளன.உள்நாட்டு துப்பாக்கி மூலமே அவர்; சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கி மூலமே கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக அண்மையில் மன்னார் மாவட்டத்திலும் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் தமிழ் காவல்துறை நபரொருவர்  அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதையுடைய தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தனது பண்ணையினை பார்வையிடுவதற்காக நேற்றிரவு சென்றிருந்தார்.இந்நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று காலை வவுணதீவில் உள்ள அரிசிஆலைக்கு அருகில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கொலை சம்பவம் தொடர்பில் முஸ்லீம் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று பிற்பகல் கைதாகியுள்ளனர்.

இதே பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு; இரண்டு காவல்துறையினர் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டிருந்தனர்.

கொலைகள் தொடர்பில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்ட போதும் பின்னர் அக்கொலைகளை முஸ்லீம் ஆயுததாரிகளே செய்தமை அம்பலமாகியிருந்தது.

No comments