ரணிலுக்கு அரியாசனம்! சஜித்துக்கு அஞ்ஞாசனம்! அடுத்த இலக்கு யார்? பனங்காட்டான்

ஜனாதிபதி பதவி வேண்டாம், பிரதமர் பதவி வேண்டாம், எதிர்கட்சித் தலைவர் பதவியும் வேண்டாம். எட்டாத பழங்களை எட்டிப் பறிக்க முனைந்து
எதற்காக மூக்குடைபட வேண்டும். கட்சித் தலைமை பதவியை எவ்வாறாவது காப்பாற்றிக் கொள்ள கிழட்டுநரியின் வாரிசான குள்ளநரி எவரையும் கிடங்குக்குள் தள்ள பின்னிற்காது. மோதுபவர்களுக்கு அஞ்ஞாசனம்தான்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்தப் பத்தியில் என்னால் எழுதப்பட்ட ரணிலின் தலைமைப் பதவி தொடர்பான விடயத்திலிருந்து இந்த வாரப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமானது.

அந்தக் கட்டுரையின் முதற் பந்தியில் தடித்த எழுத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

'ஜனாதிபதி வேட்பாளராவதைவிட தலைவர் பதவியை தம்முடன் வைத்திருப்பதில் ரணில் ஏன் அக்கறை காட்டுகிறார்? அப்பதவி தம்மிடம் இருந்தாலே பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவராகலாம் என்பது அவருக்குத் தெரியும். சஜித் வென்றாலென்ன, தோற்றாலென்ன தமக்குரிய இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் கட்சித் தலைமை தம்மிடம் இருக்க வேண்டுமென்பதை அறிந்தே ரணில் காய்களை நகர்த்துகிறார்" என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் கட்டுரையில் சுட்டியிருந்த சில பந்திகளை இப்போது மீள்வாசிப்புக்கு உட்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பதால் அந்த ஏழு பந்திகளையும் சுருக்கமாகத் தருகிறேன்.

1. நல்லாட்சிக் காலத்தில் பல வழக்குகளில் மகிந்த, அவரது மனைவி, அவரது மகன்மார் மற்றும் கோதபாய ஆகியோர் மீது எந்தச் சட்டமும் பாயாது அவர்களுக்கு சகல பாதுகாப்புகளையும் அளித்தவர் ரணில்தான்.

2. இந்தப் பின்னணியில் மகிந்த குடும்பம் ஆட்சிக்கு வருவதையோ, கோதபாய ஜனாதிபதியாக வருவதையோ ரணில் தமக்கு ஆபத்தாகப் பார்க்கவில்லை. ஒருவகையில் தமக்குப் பாதுகாப்பாகவே இதனை அவர் கருதுகிறார்.

3. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோற்றவர் என்ற களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ரணில் இப்போது விரும்பவில்லை.

4. ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை போட்டியிடுவதாக அறிவித்து, கோதபாயவுடன் அவர் தோல்வியடைந்தால் அத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை அஞ்ஞானவாசம் அடைந்துவிடும் என்பது ரணில் போட்ட கணக்கு.

5. சஜித் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவது எந்த வகையிலும் தமது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற வகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற வகையில் ரணில் முற்கூட்டியே நிச்சயித்துவிட்டார்.

6. நாற்பத்தியிரண்டு வருட அரசியலில் நான்கு தடவை பிரதமராக இருந்தவர், பல தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். பல அமைச்சர் பதவிகளை வகித்தவர். குடும்ப வாரிசாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் தாமே தொடர வேண்டுமென்பது ரணிலின் இலக்கு.

7. கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றாலென்ன, தோல்வி அடைந்தாலென்ன அரசியல் உயர்பீடக் கதிரையில் அமரும் வாய்ப்பு எப்போதும் இருக்கும்.

இவ்வாறு நான்கு மாதங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது இப்போது செயல்வடிவம் கொடுக்கிறது. இப்போதைய கட்சிச் சமாசாரங்களை இனி கவனிப்போம்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி நடைபெற்றது. இக்குழுவின் பல வெற்றிடங்களுக்கு தமக்கு நம்பிக்கையான பலரை ரணில் அண்மையில் நியமித்திருந்தார்.

72 உறுப்பினர்களைக் கொண்ட புதிய செயற்குழுவில் 22 பேரைத் தவிர மிகுதி 50 பேர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். இதில் 37 பேர் ரணில் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்கும் தீர்மானத்தை ஆதரித்தனர்.

72 உறுப்பினர்களில் 37 உறுப்பினர்கள் ரணிலை ஆதரித்தது என்பது 50 வீதத்துக்கும் அதிகமானது என்பதைக் காட்டுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரணிலுக்கு எதிராக நின்று சஜித்தை ஆதரித்த மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இப்போது பல்டி அடித்து ரணில் பக்கம் தாவி விட்டனர். தொடர்ந்தும் சஜித்துக்கு ஆதரவாக இருந்துவரும் கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனநாயக்க, முன்னாள் சபாநாயகர் பக்கீர் மரைக்காரின் மகன் இம்தியாஸ் ஆகியோரை ரணில் அட்வான்ஸாக கட்சியிலிருந்து கல்தா கொடுத்துவிட்டார்.

சஜித் ஜனதிபதித் தேர்தலில் வெற்றிபெற மாட்டாரென்று தெரிந்து கொண்டு அவரை ரணில் வேட்பாளராக நியமித்தது ஒருவகையான அரசியல் சூத்திரம். சஜித் தோல்வியடைய வேண்டுமென்பதே அதன் இலக்கு. தாம் தோற்றதற்கு ரணிலும் ஒரு காரணம் என சஜித் பின்னர் குற்றம் சாட்டியிருந்தமை இங்கு பார்க்கப்பட வேண்டியது.

ரணிலைச் சுற்றியிருந்தவர்களை ஆயுதமாக்கி அவரை பதவியிறக்க கடந்த சில வாரங்களாக சஜித் கடுமையாக உழைத்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்துவந்த தகவல்களும் ஊடகங்களின் செய்திகளும் ரணிலை பலவீனப்பட்டவராகக் காட்டி, அவர் தலைமைப் பதவியிலிருந்து இறங்கும் நேரம் வந்துவிட்டதாக கூறி வந்தன.

ஆனால், ரணில் என்ற அரசியல்வாதி புல்லுக்குள் படுத்துக் கிடக்கும் பாம்பு போன்றவர் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்ற கிழட்டு நரியின் பெறாமகனான (ஆங்கிலத்தில் மருமகன்) ரணில் ஒரு குள்ளநரி என்பதை இப்போது நிரூபித்து வருகிறார். இவரின் அஸ்தமனத்தைப் பார்க்க விரும்பியவர்கள் இவரின் மீள் எழுச்சியை பார்த்து வியந்து நிற்கின்றனர்.

ரணில் அரசியல் வானில் ஒரு சுழியன் என்பதை அறிய வேண்டுமானால் அவரின் பரம்பரையை பார்க்க வேண்டும்.

லேக்ஹவுஸ் என்ற பாரிய ஊடக விருட்சத்தின் நிறுவனர் (அமரர்) டி.ஆர்.விஜேவர்த்தனவின் பேரனே ரணில். அதாவது மகள் நளினியின் மகன் ரணில்.

இலங்கையில் பல அரசியல் கட்சிகளை ஆழப்புதைத்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை சிம்மாசனத்தில் ஏற்றுவதையே லேக்ஹவுஸ் தனது கொள்கையாக மேற்கொண்டு வந்தது.

ரணிலின் தந்தை எஸ்மன்ட் விக்கிரமசிங்க. இவரை இலங்கை அரசியலில் பீ~;மர் என்பர். குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தும் இவர் ஜே.ஆரின் குசினி அரசியலின் பிரதானியாக இருந்தவர்.

ரணிலின் தாய்மாமன் ரஞ்சித் விஜேவர்த்தன. இவரது நிர்வாகத்தில் லேக்ஹவுஸ் இருந்தபோதே சிறிமாவோ பண்டாரநாயக்க அதனை சுவீகரித்து அரசுடமையாக்கினார். தற்போது டெய்லி மிறர், சன்டே ரைம்ஸ் ஆகிய பத்திரிகை நிறுவனங்களின் உரிமையாளர் இவர்.

முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவின் சகோதரரான றொபேர்ட் சேனநாயக்கவின் மகளைத் திருமணம் செய்தவர் ரஞ்சித் விஜேரத்தின. இத்தம்பதியரின் புதல்வர் றுவான் விpஜயவர்த்தன. இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். ரணிலின் நல்லாட்சி அரசில் துணைப்பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.

ரணிலின் தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரர் (அமரர்) உபாலி விNpஜவர்த்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரேமதாசவுக்கு எதிராக ஜே.ஆரால் வளர்க்கப்பட்டவர் இந்த உபாலி. ஐலன்ட் பத்திரிகை நிறுவனம், உபாலி; வாகன தயாரிப்பு நிறுவனம், டெல்ரா சொக்கலேட் நிறுவனம் போன்றவற்றின் அதிபரான கோடீஸ்வர வர்த்தகர் உபாலி 1983 பெப்ரவரி 13ம் திகதி மலேசியாவிலிருந்து தமது சொந்த விமானத்தில் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தபோது இடைநடுவில் காணாமல்போனவர். இன்னும் அவரது சடலம்கூட மீட்கப்படவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரான பார்ண்ஸ் ரத்வத்தையின் மகளான லக்மியை உபாலி திருமணம் செய்தவர் என்பது வேறு விடயமானாலும், அரசியலுடன் சம்பந்தப்பட்டது.

1977ம் ஆண்டுத் தேர்தலில் தமது அரசியல் வாரிசாக ரணிலைக் கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரதியமைச்சர் பதவியிலிருந்து முக்கிய அமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர்.

இலங்கை அரசியலலைப் பொறுத்தளவில் பள்ளித்தோழர்களான இருவர் ராசியில்லாத ராசாக்கள். இரண்டு பிரதமர்களின் ஏகபுதல்வனாகப் பிறந்த அனுர பண்டாரநாயக்கவால் ஒரு தடவைகூட அப்பதவிக்கு வர முடியவில்லை. முதலாவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜே.ஆரின் அரசியல் வாரிசான ரணிலால் ஒரு தடவைகூட ஜனாதிபதி கதிரையில் அமர முடியவில்லை.

கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தாம் போட்டியிடாது பொதுவேட்பாளர்களை நிறுத்தி தம்மைத் தோல்வியிலிருந்து காப்பாற்றிக் கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க. சரத் பொன்சேக, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோரே ரணிலால் முன்மொழியப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள். இவர்களில் மைத்திரிபாலாவால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

ஆனாலும், மைத்திரியும் ரணிலும் வெவ்வேறு துருவங்களாக ஒரே ஆட்சியில் இருந்ததால் மைத்திரிக்கு இரண்டாம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதுவும்கூட ரணிலின் குள்ளத்தனத்தால்தான்.

மகிந்தவிடமிருந்து பிரிந்து ரணில் மற்றும் சந்திரிகா தரப்புடன் கூட்டுச் சேர்ந்ததால் மைத்திரி ஒரு தடவையாவது ஜனாதிபதியானார். ஆனால் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தும் அவரை தோல்வியடையச் செய்தவர் இதே ரணில்தான்.

ஜனாதிபதி பதவி வேண்டாம், பிரதமர் பதவி வேண்டாம், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வேண்டாம் - கட்சித் தலைமைப் பதவி மட்டுமே வேண்டுமென்பது ரணிலின் கொள்கை. பரம்பரையாக வந்த பதவி ஆயுட்காலம் முழுவதும் தமக்கானது என்பது இவரது எண்ணம்.

சம்பந்தனுக்கு கட்சித் தலைமைப் பதவியுள்ளவரை கொழும்பு பங்களா கிடைத்தது போன்று, பரம்பரை வழியாக கிடைத்த கட்சித் தலைமை ஆயுள்வரை தமக்கானது என்பது ரணிலின் இடையறாக் கொள்கை.

இவ்விடயத்தில் ரணில் எப்போதுமே ராசிக்காரன்தான். அதனால்தான் போலும் கூட்டமைப்பு அவரோடு என்றுமே நட்புடன் இருக்க விரும்புகிறது.

No comments