இனியாவது எமக்காக தன்னமலமின்றி போராடுங்கள்

"இலங்கை 1948 மாசி 4ம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை. அத்துடன், பிரிட்டிஸ்காரர்களின் கீழ் அடிமையாக இருந்ததை விட சிங்களவர்களின் கீழேயே அடிமைப்படுத்தல்கள் கூடுதலாக உள்ளது".

இவ்வாறு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இன்று (04) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

மறைமுகமாகவும் மெதுவாகவும் நடத்தப்பட்ட அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் புதிய அரசாங்கம் பதவியேற்றதும் வெளிப்படையாகவும், தீவிரமாகவும் நடக்கின்றன. இந்த நிலையிலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை புறக்கணித்து துக்க தினமாக அனுஷ்டிக்கிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 2010ஆம் ஆண்டிலிருந்து இடையிடையே கவனயீர்ப்புப் போராட்டங்களையும் அடையாள உண்ணாவிரத போராட்டங்களையும் நடாத்தி வந்த நாம் 2017 மாசி 20ஆம் திகதி ஒரு தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை கிளிநொச்சியில் நடத்தத் தொடங்கினோம்.

இது வடக்கு கிழக்கில் முதலில் தொடங்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பெருந்தொகையாக கலந்துகொண்ட போராட்டமாகவும் இருந்தமையால் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

நாம் இதுவரை எந்த கட்சியையோ அமைப்பையோ சார்ந்திராது, எவர்களையும் பேசி அவமதிக்காமலும் எட்டு மாவட்டங்களிலுமுள்ள சங்கங்களும் ஒரே அமைப்பாக கட்டுக் கோப்புடன் இயங்கி வருகின்றோம்.

நாம் மட்டுமே 2018 பங்குனியில் இருந்து இன்றுவரை ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களாக மனித உரிமைக் கூட்டத்தொடரில் பக்க அறை நிகழ்வுகளிலும் பிரதான நிகழ்விலும் நீதிக்காக குரல் எழுப்பி வருகின்றோம்.

இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் எமது அன்பான வேண்டுகோள் என்னவெனில் எமக்குப் போட்டியாக பாதிக்கப்படாதவர்களை களமிறக்கி உறவுகளைத் தொலைத்த எம்மை தங்கள் சுயநலத்துக்காக சீண்டுபவர்களை இனம் கண்டு அவர்களுக்குரிய தீர்ப்பை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் இந்த அரசாங்கம் யுத்தம் முடிவடைந்ததன் பின்பு கையளித்தவர்களை இறந்துவிட்டார்கள் என்றும், குழியைத் தேடிப் பார்க்கும்படியும் கூறுவதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். அத்துடன் இவற்றை எல்லாம் கேட்டும் மௌனித்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலையும் கண்டிக்கின்றோம்.

ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைமைகள் இனியாவது தன்னலமாகச் சிந்திப்பதை விடுத்தும், பதவி ஆசையில் தமிழ் மக்களுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் துரோகமிழைப்பதை நிறுத்தியும் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் எமது உறவுகளின் விடுதலைக்காகவும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபடவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அப்படிச் செய்யமுடியாதவர்கள் இளைஞர்களுக்கும், விட்டுக் கொடுப்புடன் மக்களுக்காகத் தியாகங்களைச் செய்யக்கூடியவர்களுக்கும் இடம்கொடுத்துவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக்கொள்ள வேண்டுமென்றும் நாம் கேட்டு நிற்கின்றோம் - என்றுள்ளது.

No comments