படங்கள் ஓடுவதாக இல்லை! கட்சியைத் தொடங்குகிறார் ரஜினி;

ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரஜினியின் சமீப காலப்படங்கள் முன்பு போல் ஓடுவதில்லை என குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, தர்பார் படமும் எடுபடவில்லை என தெரிவித்துள்ளது.
தர்பார்  படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததையும், அவர்கள் ரஜினி வீட்டை முற்றுகையிடும் அளவுக்கு சென்றதையும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.
அந்த இதழில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மாதம் ஜனவரி 14ம் தேதி ரஜினிகாந்த், திமுக மற்றும் அதிமுகவின் வேரான திராவிடர் கழக தலைவர் ஈவெரா பெரியார்  குறித்து விமர்சனம் செய்தார்.
இந்து கடவுள்கள் மீது பெரியாருக்கு இருந்த வெறுப்புணர்வை துக்ளக் 50வது ஆண்டு விழாவில் ரஜினி சுட்டிக்காட்டிய போது அவர் எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்.
இதன் பின் பிப்ரவரி 5ம் தேதி ஊடகங்களை அழைத்து குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகிய இரண்டுக்கும் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார்.
இவற்றுக்கு எதிராக போராடுபவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக போராடுவதாக அவர் கூறினார். அவரது தர்பார் படத்தின் ரிலீஸ் சமயத்தில் இந்த கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
தனது படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ரஜினி, தனது  அரசியல் ஆசையை வெளிப்படுத்துவார். ரஜினி தமிழ் புத்தாண்டில் அரசியல் கட்சி தொடங்குவார் என செய்திகள் வெளியாகும் நிலையில், பெரியார் எதிர்ப்பு பேச்சு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
இது பாஜகவின் ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதை ரஜினி மறுக்கிறார். திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ரஜினி 3ம் அணி தொடங்குவார்.
இரு பெரும் திராவிட இயக்க தலைவர்கள் ( கருணாநிதி, ஜெயலலிதா) மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே ரஜினியின் லட்சியம் என்கிறார், ஒரு அரசியல் விமர்சகர்.
2016ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி அமைந்தது. அது போல  திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ரஜினி தொடங்கும் கட்சியில் சிறு கட்சிகள் இணையும் என்கிறார் மற்றொரு அரசியல் விமர்சகர். இவ்வாறு  இந்தியா டுடே இதழ் குறிப்பிட்டுள்ளது.

No comments