ரஜினி நல்லதொரு மனிதன்:விக்கி

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாரதுக்கு ஒரு கேள்வி எனும் கேள்வி பதில் அறிக்கை ஒன்று இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கேள்வி பதில்கள் வருமாறு,
கேள்வி :- இரஜனியை நீங்கள் போய் சந்தித்ததாகவும் மக்களுக்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இரஜனியை பார்க்கப்போனமை தவறென்று கூறப்பட்டுள்ளதே. உங்கள் கருத்தென்ன?
பதில் :- இரஜனியை நான் சென்று பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட விஜயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. திரு.அசோக் வெங்கட் அவர்கள் 11ந் திகதி மாலை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த போது “இரஜனியைப பார்க்க வருகின்றீர்களா? அவரின் அலுவலகத்தில் இருந்து பேசி இன்று மாலை என்னால் சந்திப்பை உறுதிப்படுத்தமுடியும்” என்று கூறினார். மாலை 6 மணிக்குப் பின் என் மற்றைய சந்திப்புக்கள் முடிந்து ஹொட்டேலுக்குச் செல்வதாக இருந்தது. ஆகவே 6 மணிக்குப் பின்னர் என்றால் அவரை சந்திக்க முடியும் என்றேன். அசோக் இரஜனியின் காரியதரிசியுடன் பேசி இருக்கின்றார். நான் சந்திக்க வருவதாகக் கூறப்பட்ட போது இரஜனி மகாபலிபுரத்தில் இருந்த தனது தோட்ட வீட்டில் இருந்து உடனே அவரின் போயஸ் கார்டின்ஸ் வீட்டுக்கு வருவதாகக் கூறி என்னை மாலை 06.30 மணியளவில் சந்திக்க முடியும் என்று கூறியிருந்தார். நான் அங்கு சென்று அவர் வீட்டின் முன்பக்கத்தில் இறங்கியதும் ஒருவர் என் கையைப் பற்றிக் கொண்டு “வாருங்க! வாருங்க! எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டார். சற்று இருட்டாக அந்த இடத்தில் இருந்தது. கூர்ந்து பார்த்த போது சாக்~hத் இரஜனியே அங்கு நின்றார்! நான் அதற்கு முன் நேரடியாக இரஜனியைச் சந்தித்ததில்லை. பல வருடகாலம் பழகியது போல் என் கையைப் பற்றி இரஜனி தமது இருப்பறைக்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் பாபாஜியின் படமும், இராமகிரு~;ண பரமஹம்சரின் படமும், யோகாநந்த பரமஹம்சரின்; படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்க போட்டு இருந்தன. உடனே எங்கள் பேச்சுக்கள் ஆன்மீகப் பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து பேசப்பட்டன. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் இரஜனியை இலங்கைக்கு வருமாறு அழைப்பேதும் விடுக்கவில்லை. சுமார் அரை மணித்தியால நேரம் அளவளாவினோம்.
இரஜனி சம்பந்தமாகப் பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. நான் அவரில் நேரில் கண்ட குணாதிசயங்கள் பின்வருமாறு –
  1. அவர் எளிமையின் சிகரம்
  2. அவருக்கு ஆன்ம விசாரத்தில் அதிக நாட்டம்
  3. குழந்தைகள் போல் வாய்விட்டுச் சிரிக்கக்கூடிய இறுக்கந் தவிர்ந்த சுபாவம் உடையவர்.
  4. அசைக்க முடியாத இறை நம்பிக்கை உடையவர்.
  5. தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்.
  6. இயற்கையாகவே உடலில் ஒரு வேகம். பேச்சிலும் அப்படித்ததான்
  7. இயற்கையாகவே அன்பு நிறைந்தவர். அவர் அன்பு நடிப்பல்ல. அவரின் எளிமைச் சுபாவத்தால் வந்த நெகிழ்ச்சியே அது.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்ட பலவற்றுள் சுவாரஸ்யமான இரு விடயங்கள் பின்வருமாறு –
  1. “பாபா” படத்தால் பெரு வெற்றியைப் பெறலாம் என்று எண்ணியிருந்தார் இரஜனி. அது படுதோல்வியடைந்தது. அப்போது பல விநியோகஸ்தர்கள் பலத்த நட்டம் அடையும் நிலை ஏற்பட்டது. இரஜனியின் திரை வாழ்க்கை இத்துடன் முடிவடைந்துவிட்டது என்று கூட பலர் எண்ணினார்கள். தனக்கெனத் தயாரிப்பாளர்கள் கொடுப்பதாகக் கூறிய பணத்தை முழுமையாகவே எடுக்காது விட்டு பல விநியோகத்தர்களையும் மற்றவர்களையும் பாரிய நட்டத்தில் இருந்து காப்பாற்றினார். அடுத்த படம் பற்றிப் பேசும் போது முன்னைய படத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அந்த அடுத்த படத்தில் தனது ஊதியமாகத் தருமாறு கோரினார். தயாரிப்பாளர் அதிர்ந்து விட்டார். என்றாலும் ஒரு சிறு தொகையை அட்வான்ஸாகத் தருவதாகவும் மிச்சத்தை படம் ரிலீசாகிய பின் தருவதாகவும் தயாரிப்பாளர் கூறினார். இரஜனி அதற்கிசைந்தார். படையப்பா என்று நினைக்கின்றேன் அந்த அடுத்த படம். அது பலத்த வெற்றிப் படமாக அமைந்தது. கோரிய முழுத்தொகையும் இரஜனிக்குக் காலாகாலத்தில் கிடைத்தது. “பாபா” படம் படுதோல்வியடைந்தது பற்றி என்னுடன் வியந்து பேசினார். ஏன் என்று தெரியவில்லை என்றார். அதற்கு எனது கருத்தாகப் பின்வருமாறு கூறினேன். – “நீங்கள் பாபாஜியின் பரம பக்தர். யோகானந்த பரமஹம்சரின் பக்தர். அவர்களைக் கருப்பொருளாக வைத்து பணம் சம்பாதிப்பதை அவர்கள் விரும்பவில்லை போலும். ஆனால் நீங்கள் அவரின் விஸ்வாசி என்ற அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து நட்டமடைய விடவும் அவர்கள் விரும்பவில்லை போலும்” என்றேன். “ஆம்” என்பது போல் தலையசைத்தார்.
பாபாஜி இப்பொழுதும் ஒரு இளைஞராக இமாலய மலைப் பிரதேசத்தில் இருந்து வருவதைப் பற்றி நாமிருவரும் எமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
  1. அடுத்து என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அவர் தமது மாகாபலிபுர தோட்ட வீட்டில் இருந்து எனக்காகத் தன் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தமை பற்றியும் தன் வீட்டுப் படியிறங்கி வந்து என்னை அழைத்துச் சென்றமை பற்றியும் வியந்து குறிப்பிட்டேன். நன்றி கூறினேன். அப்பொழுது அவர் கூறினார் – “உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகின்றது. உங்கள் தாடி முகத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. உங்களைச் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். வவுனியாவில் ஒரு கூட்டத்திற்கு வருவதாக இருந்தது. அப்போது சந்திக்க எதிர்பார்த்தேன். ஆனால் அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. ஆகவே நீங்கள் வருவதாக அறிந்ததும் நான் அவசர அவசரமாக இங்கு வந்தேன்” என்றார். “ பரம இரஜனி இரசிகர்களான என் இரு மகன்மார்களும் நீங்கள் கூறியவற்றை அறிந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறினேன்.
இரஜனி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை கால் தெரியாது ஆடுகின்றார்கள். பாரதம் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த பந்தா காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். அவரின் மறைந்த அடுத்த வீட்டுக்காரியின் குணம் அவரிடம் சற்றும் இல்லாதிருந்ததைக் கண்டு பிரமித்தேன். எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன். அங்கு படம் எடுத்துக் கொண்டிருந்த அன்பரைப் படம் எடுத்து முடிந்ததும் நீங்களும் வாருங்கள் என்றழைத்து அவருடன் இருந்து ஒரு படம் அந்த அன்பரின் கமராவில் எடுத்துக் கொண்டார். உங்கள் கேள்விக்கு இப்போ வருகின்றேன்.
அன்று இரஜனியைப் பார்க்காது இன்னொருவரைச் சந்தித்திருந்தால் இவ்வாறான குற்றம் என்மீது சுமத்தப்பட்டிருக்குமா? அப்பொழுது உங்களிடம் என் சம்பந்தமாகக் குறைகண்டு கூறியவர் “எம் மக்களுக்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது ஏன் இன்று இன்னாரைச் சந்திக்கச் சென்றார்” என்று கேட்டிருப்பாரா? ஆகவே இரஜனியைச் சென்று விக்னேஸ்வரன் சந்தித்தமை அவர் மனதில் விசனத்தை ஏற்படுத்த வேறு காரணங்கள் இருந்திருக்கின்றன. முக்கியமாக அரசியல் காரணங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருப்பார் என்று முடிவெடுக்க அதிக நேரம் தேவையில்லை. அவரிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். “நீங்கள் தமிழ் மக்கள் பிரச்சனைகளில் மட்டும் சதா அமிழ்ந்திருக்கும் ஒருவர் என்றால், வேறெந்த நாட்டமும் கொண்டவர் அல்ல என்றால், உங்கள் கடமை நேரம் முடிந்த பின்னர் ஒரு சினிமா தானும் பார்க்காத ஒருவர் என்றால் தயவு செய்து எங்கள் கட்சியில் சேருங்கள். உங்களைப் போன்ற விருப்பு வெறுப்பற்ற தெய்வீகத் தொண்டர்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம். வாருங்கள்! வந்து எம்முடன் சேருங்கள்! மக்களுக்காகப் பாடுபடுங்கள்! என்னைப் பொறுத்த வரையில் நான் சாதாரணமானவன். உங்கள் உச்ச மட்ட தெய்வீக எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஒருவர் அல்ல நான்.”
என்னைக் குறை கூறுபவர்கள் சில விடயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும்.
  1. எனது தனிப்பட்ட விஜயத்தை அரசியல் சந்திப்பு போன்று ஆக்கியவர்கள் பத்திரிகையாளர்கள்.
  2. நான் தற்போது பதவியில் இல்லாதவன். ஏதோ பெரிய தவறை நான் இழைத்ததாக சிலர் பேசிக் கொள்வது விந்தையாக இருக்கின்றது.
  3. மக்களாகிய நாங்கள் எம்மைப்பற்றி சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். “Man is a conditioned being” என்று தத்துவஞானி து.ஜெயகிருணமூர்த்தி கூறியுள்ளார். நாம் யாவரும் சுற்றுச் சூழலால், படிப்பால், அனுபவத்தால் உருமாற்றப்பட்டவர்கள். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அந்தக் குழந்தை நல்லது கெட்டது” என்று மேற்குறிப்பிட்ட பாதிப்புக்களால்த்தான் உருமாறுகின்றது. இதை விட அவர்களின் முன்னைய பிறவிகளில் இருந்தும் சில விருப்பு வெறுப்புக்களை கொண்டு வருகின்றார்கள். ஒருவர் சரி என்பது இன்னொருவருக்கு தவறாகப்படும்.
இரஜனியை தெலுங்கன், சினிமாக் கூத்தாடி, பஸ் கண்டெக்டராக இருந்தவன், தமிழர்களுக்கு எதிரானவன் என்றெல்லாம் கூறுபவர்கள் அவரைச் சென்று ஒருமுறை சந்தித்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அப்போது அவரிடம் உங்கள் கேள்விகளை முன்வைக்கலாம். அப்போது அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்.
என்னையுந்தான் தெற்கில் தாறுமாறாக விமர்சிக்கின்றார்கள். இனவாதி என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். கலவரத்தை உண்டாக்க எத்தனிக்கும் ஓர் கயவன் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அதைச் சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்த்தான் வெளி உலகம் அவர்களுக்கு தென்படுகின்றது.
சிலர் நான் நீதியரசராக இருந்தவர், ஒரு சினிமாக் காரரைச் சென்று சந்தித்தது தவறு என்று கூறுகின்றார்கள். நாளை இரஜனி அவர்கள் பண்டாரவன்னியனைத் திரையில் சித்திரித்தால் அப்போதும் அவரை திரைக் கூத்தாடி என்று தான் கூறுவீர்களா?
இரஜனியைச் சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அவருடன் எம்முடைய சந்திப்பு முடிந்ததும் தானே என்னுடன் வந்து நான் ஏறியதும் என் கார் கதவைச் சாத்தி வழி அனுப்பி வைத்தார். அந்தச் சிறந்த மனிதரின் அறிமுகத்தை, சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் முதலமைச்சர், வடமாகாணம் செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி

No comments