காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள்? விக்னேஸ்வரன் கேள்வி

காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள்   என்பதை ஜனாதிபதி கோத்த இராஜபக்ச கூறவேண்டும் என முன்னாள்
முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணிக் கட்சியின் தலைவருமான விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்

யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல்போயுள்ள மக்கள் யுத்தத்தின்போது இறந்துவிட்டதாக மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களை மீண்டும் தன்னால் கொண்டுவரமுடியாது என்றும் அவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாண்பு மிகு ஜனாதிபதி அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் எதிர்பார்ப்புக்கள், துயரங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் சர்வசாதாரணமாகக் கூறியிருக்கிறார்.

தமது உறவினர்கள் எங்காவது ஒரு இடத்தில் உயிருடன்தான் இருக்கின்றார்கள் என்றும் என்றாவது ஒருநாள் அவர்களின் குரல் தமது காதுகளுக்குக் கேட்கும் என்றும் பல வருடங்களாக துயரத்துடன் வாழ்ந்துவரும்  யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடும் நோக்கத்துடன் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் “இதுதான் உண்மை” என்று தனக்கு தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்ப்பதுபோல இந்தச் செய்தி “யுத்தத்தில் பொறுப்புக்கூறல்” விதி முறைகளுக்கு அமைவானதாக இல்லை. காணாமல் போயுள்ளவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ள மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் காணாமல் போயுள்ளவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் எந்த விசாரணையின் அடிப்படையில் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பதையும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நாட்டு மக்களுக்குங் கூறவேண்டும். விசாரணை ஒன்றை நடத்தியிருந்தால் அது எப்போது, யாரால் நடத்தப்பட்டது என்பதனையும் அவர் வெளிப்படுத்தவேண்டிய பொறுப்புக்கு தற்போது உள்ளாகியிருக்கின்றார். முக்கியமாக காணாமல் போனோர் பலரை இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்கள். விசாரணைக்கு அவர்கள் எவரையும் அழைத்ததாகக் கூறப்படவில்லை. பின் எவ்வாறான விசாரணையின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று மக்கள் அறிய உரித்துடையர்கள்.

அதேவேளை, 20,000 க்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள்  என்று மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கூறியிருப்பது இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.  இதனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்புநாடுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையில் குறித்த தீர்மானம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனே அந்த உறுப்பு நாடுகளுக்குச் சென்று எமது விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதின் அவசியம் பற்றிப் பேசி வரவேண்டும். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கூற்று இவ்வாறான நடவடிக்கைகளை மிக அவசியம் ஆக்கியுள்ளது. இக்கூற்றில் இருந்து அரசாங்கம் ஜெனிவாவில் என்ன கூற போகின்றது என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

காணாமல் போனவர்களில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள். இரண்டாவது வகையினர் யுத்த வலயத்துக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். மூன்றாவது வகையினர் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களிடம் சரண் அடைந்தவர்கள் அல்லது பெற்றோர் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே இறந்துவிட்டார்கள் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் கூற்றின் அர்த்தம்.  இன்றைய ஜனாதிபதியே யுத்தம் நடைபெற்றபோது பாதுகாப்புச் செயளாலராக இருந்ததுடன்  தானே யுத்தத்தை வழிநடத்தி முடிவிற்கு கொண்டுவந்ததாக பல தடவைகள் கூறியிருப்பதால் அவரின் கூற்றில் உண்மையிருக்கக்கூடும். ஆகையினால்த் தான் காணாமல் ஆக்கப்பட்ட இத்தனை பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்  என்று வலியுறுத்துகின்றேன். இதுவே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். இத்தகைய ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கும்.

ஆகவே தான் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விபரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும். அக்கால கட்டத்தில் போர் முடிந்த பின்னர் எமக்குக் கிடைத்த தகவலின் படி இராணுவத்தினரே மக்களைச் சரணடையச் சொன்னார்கள் என்றும் இராணுவத்தினர் அவர்களைப் பாரம் எடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படி என்றால் பாரமெடுத்த இராணுவத்தினரைக் கூப்பிட்டு அவர்கள் பொறுப்பேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்று ஏன் கேட்கவில்லை என்பதையும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர் வடமாகாணம்
செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர் தமிழ் மக்கள் பேரவை

No comments