கரைச்சியிலும் போட்டுப்பிடிப்பு!


யாழ்.மாநகரசபையினை தொடர்ந்து கூட்டமைப்பு வசமுள்ள கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சமத்துவம் , சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்களிக்கும் இடையில் இன்று கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதனவரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில், வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது விசேட அமர்வு ஒன்றினை நடத்தி குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்படும் என வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபை விசேட அமர்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

விடயம் தொடர்பாக ஆராயப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தரப்பு உறுப்பினர்களிற்கும் அவரது அரசியல் போட்டியாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முருகேசு சந்திரகுமார் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து 10 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் சபை அமர்வுகள் ஆரம்பமாகியபோதும் வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பு வரை சென்றிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவராசா மீது சுயேட்சைக்குழு உறுப்பினர் ரஜனிகாந்த் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அதேவேளை  தாக்குதலுக்கு இலக்காகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments