திலீபன் தூபி பக்கம் சென்றமைக்கும் விசாரணை?


தியாகி திலீபனின் நினைவு தினத்தில் யாழ்.மாநகரசபை இணைந்தமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தியாகி திலீபனின் நினைவு தினத்தின்போது நிகழ்வு இடம்பெற்ற சமயம் மாநகர சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட நீர்த்தாங்கி மூலம் அப்பகுதி குளிர்விக்கப்பட்டிருந்தது. அதற்கான அனுமதியை யார் வழங்கியதெனவே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணையுல் ஈடுபட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் 26ம் திகதியன்று நல்லூர் பின் வீதியில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாக பகல்வேளை நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஓர் நீர்த்தாங்கி அப்பகுதியில் காணப்பட்ட வெப்பத்தை கருத்தில் கொண்டு நீர் விசிறி குளிர்வித்திருந்தது.

இவ்வாறு நீர் விசிறப் பயன்படுத்தப்பட்ட நீர்த் தாங்கி எவரது அனுமதியின் பெயரில் குறித்த நிகழ்விற்கு பயன் படுத்தப்பட்டது என மாநகர ஆணையாளரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது எழுத்தில் கோரியுள்ளனர்.

இதனிடையே நல்லூர் திலீபன் தூபி யாழ்.மாநகரசபை காணியில் அமைந்துள்ளதாக நீதிமன்றில் படியேறி வாதிட்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments