தீர்வுக்காக ஒன்றிணைந்துள்ளோம் - துளசி

இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைந்துள்ளதாக ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் மற்றும் சில அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட முடிவு எட்டப்பட்டுள்ளது.
வவுனியா தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடி புனர்வாழ்வு பெற்ற போராளிகள் போருக்குப் பின்னர் பல்வேறு தளங்களிலே செயற்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக பல்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த அனைத்துப் போராளிகளும் சில கட்டமைப்புக்களும் இன்று முதல் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம்.
இந்தப் போராளிக் கட்டமைப்புகள் தமிழர்களது இனப் பிரச்சினைக்கு சாத்தியமான விடயங்கள் தொடர்பாக ஆராய்வது, அரசியல் கைதிகளின் விடுதலை, வேலை வாய்ப்பில் போராளிகளை முன்னிலைப்படுத்துவது போன்ற விடயங்களை பிரதானமாக ஆராய்கின்றது. - என்றார்.

No comments