சேனாதி உள்ளேயா? வெளியேவா? ; சிவிகே பதில்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா களமிறங்க மாட்டார் என்ற செய்தி பொய்யானது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “இன்றைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சவாலான காலகட்டமாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா போன்ற பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குவது தவறானது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரும் இழப்பாக அமையும்.
ஆகவே, எம்மைப் பொறுத்தவரையில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இளைஞர்கள் வரவேண்டும். அதேவேளையில் வயது மூத்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பது வெற்றுக் கோசமாகவே இருக்கின்றது.
அத்துடன் கட்சியின் தலைவரும் அனுபவம் மிக்கவருமான மாவை சேனாதிராஜா நிச்சயமாக யாழ்.மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்பதுடன் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிட வேண்டும்.
அதேவேளையில், கிழக்கில் இரா.சம்பந்தன் ஐயாவும் போட்டியிட வேண்டும். அவர் போட்டியிடா விட்டாலும் இழப்பு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments