சிங்களத்தைப் பலப்படுத்தும் இவ்வருட பொதுத்தேர்தல் தமிழரை பலவீனப்படுத்தும்! பனங்காட்டான்

தங்களுக்கு மாற்றுத் தலைமை தேவையானது என்ற மனநிலை தமிழர் மனதில் வேரூன்றுவதற்கு தாங்கள் தொடர்ந்து விட்டு வரும் தவறே காரணமென்பதைக் கூட்டமைப்பு சிந்தித்து, அதனை
நிவர்த்தி செய்ய சில வாரங்களே உள்ளன என்பதை உணராமல் தங்களுக்குள் தொகுதி பிரிப்பதில் குடுமி பிடி சண்டையில் ஈடுபட்டால், இறுதியில் வெறும் குடுமிதான் மிஞ்சும். தலைமைத்துவம் போய்விடும்!

புதிய ஆண்டு பிறந்துள்ளது. மக்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு நல்ல காலம் தான்.

இலங்கையைப் பொறுத்தளவில் இன்னொரு தேர்தல் ஆண்டு பிறந்துள்ளது. முதல் ஆறு மாதத்துக்குள் இரண்டு தேர்தல்கள் நடைபெறும் சாத்தியம் உண்டு.

பத்தொன்பதாவது அரசியல் திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டுக் காலத்தில் நான்கரை ஆண்டுகள் கழிந்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதனைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

அதன் பிரகாரம் அடுத்த மாதம் (பெப்ரவரி) நாலரை ஆண்டுகள் முடிவடைவதால் மார்ச் மாதத்துக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அடுத்த பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த ராஜபக்ச குடும்பம் விரும்புகிறது. ஏப்ரல் 25இல் இத்தேர்தல் நடைபெறலாமென சொல்லப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் சூட்டோடு சூடாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, விரும்பியவாறு சட்டங்களை மாற்றி தங்கள் போக்கில் அடுத்த 20 வருடங்களை குடும்ப ஆட்சிக்குள் வைத்திருக்கலாமென ராஜ்ய - பட்ச குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.

இந்தக் காலப்பகுதிக்குள் நாமல் ராஜபக்சவுக்கு வயது வந்து, பக்குவம் அடைந்துவிடுவார் என்றால், பிறகென்ன அவர்தான் அடுத்த ஜனாதிபதியென மகிந்த கருக்கூட்டுகிறார்.

இப்படித்தான் 1977ல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கற்பனை உலகில் சஞ்சரித்தார். அவரது குடும்ப வாரிசாகவிருந்த ஒரேயொரு மகன் ரவி ஜெயவர்த்தனவுக்கு அரசியலில் நாட்டம் இருக்கவில்லை. அதனால் தமது பெறாமகனான ரணில் விக்கிரமசிங்கவை தமது ஆரம்பத் தொகுதியான களனிய ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கி, பாதி அமைச்சராக்கி பின்னர் முழு அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

தொகுதி ரீதியான தேர்தல் முறையை நீக்கி விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

1977க்கு முன்னைய சகல பொதுத்தேர்தல்களிலும் மொத்த வாக்கு எண்ணிக்கையில் அவரது ஐக்கிய தேசிய கட்சியே அதிக வாக்குகளைப் பெற்ற போதிலும், தொகுதி ரீதியான போட்டி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அவரது கட்சிக்கு வழங்கவில்லை.

எனவே விகிதாசார முறையை அமுல்படுத்தினால், ஆயுட்காலம் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சியில் இருக்குமென நினைத்தே 1978இல் புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக முதலாவது ஜனாதிபதியானார் ஜெயவர்த்தன.

நினைத்தது நடந்ததா?

அடுத்த ஜனாதிபதியான பிரேமதாச பதவிக்காலம் முடிவதற்குள் மரணமாக, இடைக்கால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க பதவியேற்று ஓய்வு பெற, அடுத்த தேர்தலில் - 1994இல் ஐக்கிய தேசிய கட்சி குப்புற வீழ்ந்தது. அதன்பின்னர் அதனால் முழுமையாக எழுந்திருக்கவே முடியவில்லை.

1994 தேர்தலோடு சிறிலங்கா சுதந்திரகட்சியின் சந்திரிகா குமாரதுங்க இரு தடவையும்;, தொடர்ந்து அதே கட்சியின் மகிந்த ராஜபக்ச இரு தடவையும், அடுத்த ஐந்து வருடம் சுதந்திரக் கட்சியிலிருந்து தாவி பொதுவேட்பாளராக நின்ற மைத்திரிபால சிறிசேன ஒரு தடவையுமாக சுமார் இருபத்தைந்து வருடங்கள் ஒரு கட்சியே ஜனாதிபதிப் பதவியையும் ஆட்சியையும் கைப்பற்றி இருந்தது.

மீண்டும் அதே கட்சிப் பின்னணியுடன் ஜனாதிபதிப் பதவி வழியாக கதிரையேறியுள்ள கோதபாய, 1994க்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை அந்தக் கதிரையின் பக்கம் வரவிடாமல் தள்ளியுள்ளார்.

இலங்கை அரசியலில் கிழட்டு நரி எனப் பெயர் பெற்ற ஜெயவர்த்தன, புத்திசாலித்தனமாக தனது கட்சிக்குச் சாதகமாக உருவாக்கிய 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அவரது கட்சியைக் கவிழ்த்து, அவரால் உருவாக்கப்பட்ட ரணிலையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டச் செய்துள்ளதே தவிர, எந்த மீட்சியையும் ஏற்படுத்தி ஆட்சியைக் கொடுக்கவில்லை.

இந்தப் பின்னணியை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன எந்த சிந்தனையோட்டத்தில் அரசியலமைப்பை மாற்றியமைத்தாரோ, அதே சிந்தனையில்தான் ராஜபக்ச குடும்பமும் இப்போது மாற்றங்களைச் செய்ய முனைகிறது.

இவ்வருட பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமானால், ஆகஸ்ட் மாதமளவில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்தி அதிலும் எப்படியாவது வெற்றி பெற்றால், பின்னர் தொடர்ச்சியாக தங்கள் ஆட்சியே என ராஜபக்ச குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.

இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டு இரண்டு முக்கிய திட்டங்களை நிறைவேற்ற கோதபாய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில், இலங்கை தொடர்பில் நான்காண்டுகளுக்கு முன்னர் நிறைவேறிய 30ஃ1 இலக்கத் தீர்மானத்தை விலக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

போர்க்குற்றத்துக்குப் பொறுப்புக்கூறவும், சர்வதேச நீதிப்பொறிமுறையில் விசாரணை நடத்தவுமென ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இத்தீர்மானம் நாட்டுக்கு ஆபத்தானது என்று பகிரங்கமாக அறிவித்துள்ள கோதபாய இதனதை; தூக்கி வீசப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த முயற்சி வெற்றி பெற்றாலென்ன, வெற்றியளிக்காவிட்டாலென்ன - இதனை எதிர்க்கும் செயற்பாடு ஒன்றே சிங்கள பௌத்த வாக்குகளை பெருமளவில் தம்பக்கம் சரிக்குமென அவர் நினைப்பது தவறான பார்வையல்ல.

இந்தச் செயற்பாடு பொதுத்தேர்தலில் மேலதிக பலத்தை அவர் பெற வழிவகுக்கலாம்.

அடுத்த முயற்சி பத்தொன்பதாவது திருத்தத்தை நீக்குவதற்கான நடவடிக்கை.

இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மகிந்தவை பிரதமராகக் கொண்ட அணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. இதனால் எந்தச் சட்டத்தையும் இலகுவாக நிறைவேற்ற முடியாது.

அதேசமயம் அரசியல் சட்ட மாற்றங்களை விஜேதாச ராஜபக்ச என்ற அமைச்சர் ஊடாக தனிநபர் பிரேரணையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரணில் அணியினர் தமது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய 19வது திருத்தம் ஜனாதிபதியின் பதவி அதிகாரங்களை மட்டுப்படுத்தியது. சட்டத்துறை, நீதித்துறை, காவற்துறைகளில் நியமனங்கள், பதவி உயர்வுகள், பதவி நீக்கங்களை ஜனாதிபதி விரும்பியவாறு செய்ய முடியாது 19வது திருத்தம் தடுத்தது.

ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவியையும்கூட வகிக்க முடியாது 19வது திருத்தம் தடுத்துள்ளது.

இதனால் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை தமக்குத் தாமே வழங்க முடியாதுள்ள துர்ப்பாக்கிய நிலையிலுள்ளார் கோதபாய.

தாம் விரும்பும் அமைச்சுப் பதவிகளுக்கு தம்மைத்தாமே நியமனம் செய்வதற்கு ஏதுவாக தனிநபர் பிரேரணையை அமைச்சர் விஜேதாச ஊடாக கோதபாய முன்னெடுத்துள்ளார்.

இந்த முயற்சி வெற்றியளிக்கத் தவறின், இந்த மாதம் 3ஆம் திகதிய தமது கொள்கை விளக்க உரையை அடுத்து காலந்தாழ்த்தாது நாடாளுமன்றத் தொடரை ஒத்தி வைத்து பெப்ரவரியில் கலைத்து பொதுத்தேர்தலை அவர் அறிவிப்பார்.

பொதுத்தேர்தல் என்பது சிங்களத் தேசத்தில் ஒரு கட்சி ஆட்சியைப் பலப்படுத்துமென எதிர்பார்க்கும் இவ்வேளையில், தமிழர் தாயகத்தில் ஒரே தலைமைத்துவம் என்பதை கேள்விக்குறியாக்கலாம்.

ஒரு காலத்தில் 22 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழர் தலைமை, அதன் போக்கை ஆத்மசுத்தியாக விசாலித்து கொள்கை அடிப்படையில் (பதவி அடிப்படையிலன்றி) ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்கத் தவறின் 12 ஆசனங்களைக்கூட பெற முடியாது போகலாம்.

வயது மூப்பு இயலாமை காரணமாக சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதோ, இளையோரைத் தேர்தலில் நிறுத்துவதோ தமிழர் தரப்பின் ஒற்றுமையை நிலைநாட்டாது.

தங்களுக்கு மாற்றுத் தலைமை தேவையானது என்ற மனநிலை தமிழர் மனதில் வேரூன்றுவதற்கு தாங்கள் தொடர்ந்து விட்டு வரும் தவறே காரணமென்பதைக் கூட்டமைப்பு சிந்தித்து, அதனை நிவர்த்தி செய்ய சில வாரங்களே உள்ளன என்பதை உணராமல் தங்களுக்குள் தொகுதி பிரிப்பதில் குடுமி பிடி சண்டையில் ஈடுபட்டால், இறுதியில் வெறும் குடுமிதான் மிஞ்சும். ஷதலை|மைத்துவம் போய்விடும்!

No comments