சுமந்திரன் இனி அதை செய்வாரா? கேட்கிறார் சுகாஸ்

கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதோடு, அரசியலில் இருந்தும் ஒதுங்குவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பல தடவைகள் கூறியிருந்தார். ஆனால் ரணில் அரசின் ஆட்சியும் முடிந்து அடுத்த தேர்தலும் வரப்போகின்ற நிலையில் ,தீர்வு கிட்டவேயில்லை.எனவே தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சுமந்திரன் அரசியலில் பதவியைத் துறந்து, அரசியலில் இருந்து ஒதுங்குவாரா? ”
இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார் தமிழ்த் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டதரணி சுகாஷ்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், அதையொட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைச் சூறையாடும் நாடகத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், கடந்த காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து போனவராக, தமிழ் மக்களை எப்படி ஏமாற்றினார் என்பதை மறைத்து, இப்போது அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல பாசாங்கு செய்யத் தொடங்கியுள்ளார். இந்தப் பாசாங்கு இனியும் தமிழர்களிடம் எடுபடாது.
தன்னுடைய நெருங்கிய நண்பரான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றது முதல் சுமந்திரன் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் விடயம், ’ரணிலின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒர் தீர்வைப் பெற்றுத்தருவோம். அவ்வாறில்லாவிட்டால் பதவி விலகுவதோடு, அரசியலில் இருந்தும் ஒதுங்குவேன்‘ என்பது தான்.
ஆனால் ரணில் அரசின் ஆட்சியும் முடிந்து அடுத்த தேர்தலும் வரப்போகின்ற நிலையில், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேயில்லை. எனவே எப்போது சுமந்திரன் பதவி விலகப் போகிறார்? உங்களின் மென்வலுவும், இராஜதந்திரமும் தோல்வியடைந்துவிட்டது. இதுவரை தமிழ் மக்களை நீங்களும், சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் ஏமாற்றியது போதும். இனியும் மக்களை ஏமாற்ற முற்பட்டால் அது தமிழினத் துரோகமாகவே கொள்ளப்படும்” என்றுள்ளார்

No comments