மாணவியை கொன்ற சிப்பாய்க்கு நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி காஞ்சனா ரொஷானியை கழுத்து அறத்து கொலை செய்த அவரது கணவரான இராணுவ வீரரை எதிர்வரும் 6ம் திக திவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
சம்பவ தினமான நேற்று (22) கொலை நடந்தவுடன் இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.
கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர்.
“எதிரி தமது மகளை 2017ம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்ததுடன் அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன” என்று மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.
இதனையடுத்து எதிரியை வரும் பெப்ரவரி 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.
இதேவேளை, “மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பு எடுத்துவிட்டு மிருகமாக வாழ முடியாது” என்று நீதிவான், எதிரிக் கூண்டில் நின்ற எதிரியைப் பார்த்து எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments