சிங்கள அரசியல் அரங்கை திணறடிக்க வைக்கும் திரைப் பிரபலங்கள் - பனங்காட்டான்

விஜே குமாரதுங்க, காமினி பொன்சேக, மாலினி பொன்சேக, கீதா குமாரதுங்க என்ற நடிகர்கள் வரிசையில் அரசியலுக்கு வந்த ரஞ்சன் ராமநாயக்க என்ற நடிகர் சிங்கள அரசியல் அரங்கில்
சகலரையும் திணறடிக்க வைத்துள்ளார். இதனால் பிரதமர், அமைச்சர்கள் மட்டுமன்றி பலர்  கேள்விக்குறியாகி உள்ளனர். கோதா அரசு புலி வாலைப் பிடித்த நிலையிலுள்ளது. 

இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலில் இப்போது அதிகம் பேசப்படுபவர் அல்லது பேசுபொருளாக இருப்பவர் ரஞ்சன் ராமநாயக்க எனும் இளம் அரசியல்வாதி.

இவரை அரசியல்வாதி என்பதிலும் பார்க்க தலைசிறந்த நடிகர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் என கலைஞர்களில் ஓர் ஆல்ரவுண்டர் என்று கூறுவதே பொருத்தம்.

கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சி பிரசாரகராக விளங்கியதோடு, எதிர்கட்சியினரை கைக்குள் இருந்த ஆதாரங்களை கூறி கிழித்துத் தள்ளியவர்.

அரசியல் பழிவாங்கலாக இவரது இல்லத்தை இந்த மாதம் நான்காம் திகதி சோதனையிட்ட புலனாய்வுத்துறையினர், அனுமதிப் பத்திரம் பெறாத கைத்துப்பாக்கி அங்கிருந்து மீட்டதாக அறிவித்தனர். அத்துடன் சில ஒலிப்பதிவு தட்டுகளையும் மீட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஒலித்தட்டுகளில் பலதுறைப் பிரமுகர்களுடன் ரஞ்சன் நடத்திய உரையாடல்கள் பதியப்பட்டிருந்தன. இவற்றுள் சிலவற்றை சில சமூக ஊடகங்கள் எவ்வாறோபெற்று வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

நீதிபதிகள், அரசியல்வாதிகள், அவர்களின் மனைவிமார், சில நடிகைகள் என்று பலதரப்பட்டோருடனான உரையாடல்கள் இதில் இடம்பெற்றிருந்ததால், விளக்கமறியலிலுள்ள ரஞ்சனின் கைது, கோதபாய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புலி வாலைப் பிடித்த கதையாகியுள்ளது.

சப்ரகமுவ மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் பதவியுடன் ஆரம்பமான இவரது அரசியல் வாழ்வு, பின்னர் கட்டான தொகுதி எம்.பியாக்கி ராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளையும் பெற வழிசமைத்தது.

ஆனால், அவரது துடுக்குத்தனம் பலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தியதோடு இவரையும் நெருக்கடிக்குள் தள்ளியது. இதனால் ஐக்கிய தேசிய கட்சி இவரைத் தற்காலிகமாக வெளியேற்றியுள்ளது.

விளக்கமறியலில் இருந்தவாறு நாடாளுமன்றம் சென்ற இவர் முக்கியமான ஒரு உரையை அங்கு நிகழ்த்தி அனைவரையும் உலுக்கியுள்ளார்.

தாம் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டகங்களில் மேலும் பல குரல்கள் உள்ளன என்றும்,  அதில் மகிந்த ராஜபக்சவும் அடங்குவார் என்றும், பல அரசியல்வாதிகளின் உரையாடல் பதிவுகளும் அதில் உண்டென்றும், அவற்றை எடுத்துவர தம்மை இரண்டு நாள் பிணையில் விடுமாறும் இவர் விடுத்த வேண்டுகோள் பலரது அடிவயிற்றைக் கலக்கியுள்ளது.

இவரது ஒலிப்பதிவுகள் அம்பலமானதால் இதுவரை இரண்டு நீதிபதிகள் பதவி இழந்துள்ளனர். இன்னொரு நீதிபதி விசாரணைக்கு முகம் கொடுத்துள்ளார்.

அரசியல்வாதிகள் நீதிபதிகளுடன் தொடர்பு கொள்வதும் அவர்க;டாக தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதும் இதுதான் முதன்முறையன்று.

1970களில் சிறிமாவோ அரசாங்கத்தில் நீதியமைச்சராகவிருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க சில நீதிபதிகளின் சுதந்திரத்தில் தலையிட்டு அவர்களை தனது கால்களுக்குள் போட்டு நசுக்கியதை நாடாளுமன்ற அறிக்கையில் பார்க்கலாம்.

1977ல் பிரதமராகத் தெரிவான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது வழக்கறிஞரான நெவில் சமரக்கூன் என்பவரை பிரதம நீதியரசராக நியமித்தார். நியமங்களை மீறி தமது நேரடித் தெரிவாக இந்த நியமனத்தை ஜே.ஆர். வழங்கினார்.

1978 பெப்ரவரி 4ம் திகதி அதே பிரதம நீதியரசரின் முன்னிலையில் காலிமுகத்திடலில் ஜே.ஆர். முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஆனால், அடுத்த சில வருடங்களுக்குள் பாடசாலை ஒன்றின் நிகழ்வில் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கூன் உரையாற்றுகையில் ஜே.ஆரை விமர்சனம் செய்ததால் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. சினங்கொண்ட ஜே.ஆர். பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்ய முனைந்தபோது, விடயமறிந்த நெவில் சமரக்கூன் பதவியிலிருந்து தாமாகவே விலகி ஆஸ்திரேலியா சென்று குடியேறிவிட்டார்.

ஆர்.பிரேமதாச ஆட்சிக்காலத்தில் ஒரு வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பை வழங்க மறுத்த நீதிபதி ஒருவரின் இல்லம் பிரேமதாசவின் கையாட்களால் கல்வீச்சு நடத்தி தாக்கப்பட்டது. பொலிசாரின் உதவியை நீதிபதி கோரியபோதும் அவர்கள் அந்த இடத்துக்குச் செல்லவில்லை.

இந்த விடயங்களை தெரிந்து கொண்ட ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரம் அப்போதைய சம்பவங்கள் போன்று பார்க்கப்படவில்லை. எனெனினும் இவரது எம்.பி. பதவியை பறிக்க ஒலிப்பதிவுகளை சரியான ஆதாரமாக்கப் பார்க்கிறது ராஜபக்ச குடும்பம்.

இச்சந்தர்ப்பத்தில், சிங்கள அரசியலில் ஏற்றமும் இறக்கமும் கண்ட சில நடிகர்களின் கடந்த கால வரலாற்றைப் பார்ப்பது நல்லது.

123 திரைப்படங்களில் நடித்து சிங்களத் திரைவானில் உச்சத்தில் இருந்த விஜேகுமாரதுங்க சிறிலங்கா மகாஜனக் கட்சியின் நிறுவனர். சந்திரிகா பண்டாரநாயக்கவை திருமணம் செய்த பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் தேசிய அமைப்பாளரானார்.

1977ல் கட்டான தொகுதியில் பெருவெற்றி பெற்று நாடாளுமன்றம் புகுந்த இவரை ஜனாதிபதி ஜெயவர்த்தன நக்சலைட் என்று கூறி சில காலம் சிறைக்குள் தள்ளினார். அரசியலில் ஒரு துருவமாக ஓங்கி வளர்ந்து சென்ற இவர் 1988 பெப்ரவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைச் செய்தவர்கள் ஜே.வி.பி.யின் ராணுவப் பிரிவினர் என்று சொல்லப்பட்டது. ஆனால் விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஆர்.பிரேமதாச மற்றும் அமைச்சர்களான றஞ்சன் விஜேரத்ன, காமினி லொக்குகே ஆகியோரை குற்றம் சாட்டியது.

இவர்களுள் முதல் இருவரும் கொழும்பில் வெவ்வேறு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். காமினி லொக்குகே இப்போதும் அரசியலில் உள்ளார்.

ஜனாதிபதி பிரேமதாசவினால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் பிரபல கதாநாயக நடிகர் காமினி பொன்சேக. 1989ல் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு எம்.பியானவர் காமினி. இவருக்கு பிரதிச் சபாநாயகர் பதவியும் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது.

1994ல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற சந்திரிகா குமாரதுங்க வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் ஆளுனராக காமினியை நியமித்து தாம் விரும்பிய எதையோ நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் காமினி அரசியல் சாக்கடைக்குள் அமிழ்ந்து போகாது மெதுவாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

காமினி பொன்சேகவின் பெருமளவான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்ற மாலினி பொன்சேக 1968 இலிருந்து திரையுலகில் புகழ் பெற்று விளங்கியவர். 2010ம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமனம் பெற்று எம்.பியானார் ஆயினும், இரண்டாண்டுகளின் பின்னர் - 2012ல் அரசியலுக்கு குட்பை கூறிச் சென்றுவிட்டார்.

இந்த வகையில் காமினியும் மாலினியும் (இவர்கள் நிpஜவாழ்வில் கணவன் மனைவி அல்ல) ஒரே முடிவை குறுகிய காலத்தில் எடுத்ததால் தங்கள் பெயரை களங்கப்படுத்தாது தப்பிவிட்டனர்.

இன்னொரு சிங்கள் நடிகையான கீதா குமாரதுங்க 2017 மே மாதம் நடைபெற்ற  தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மைத்திரி - ரணில் அரசு நிறைவேற்றிய 19வது அரசியல் திருத்தம் இவரது பதவிக்கு ஆப்பு வைத்தது. இரட்டைப் பிரஜாவுரிமைகள் பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்க முடியாது என்ற புதிய சட்டத்திருத்தத்தால் கீதா குமாரதுங்க பதவி இழக்க நேர்ந்தது.

இலங்கைப் பிரஜாவுரிமையுடன் சுவிஸ் நாட்டுப் பிரஜாவுரிமையையும் இவர் வைத்திருந்ததால் மேன்முறையீட்டு நீதிமன்றம் இவரது எம்.பி. பதவியை பறித்தெடுத்தது.

இவர்களைப் போன்று ரஞ்சன் ராமநாயக்க தப்பியோடக் கூடியவராகத் தெரியவில்லை. 'நான் மருத்துவமனைக்குச் சென்று படுக்க மாட்டேன். சிறைச்சாலைக்குச் சென்று எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்துவேன்" என்ற இவரது கூற்று ஏதோ ஒன்றை சொல்லாமற் சொல்கிறது. பல அரசியற் பிரமுகர்களின் மனைவிமார், துணைவிமாரின் ஒலிப்பதிவுகள் இவரிடம் இருந்துள்ளன என்பது தற்போது பரம ரகசியம்.

ஏன் இதனைச் செய்தார்? எதிர்கால அரசியல்திட்டம் ஏதாவது இவருக்குண்டா? இவர் ஒரு மனநோயாளி இல்லை என்பதால் விசாரணைகளின் பின்னர் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருமென எல்லாக் கட்சி அரசியல்வாதிகளுமே நம்புகின்றனர்.

அடுத்த சில மாதங்களுள் வரவிருக்கும் பொதுத்தேர்தல் இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தரும்.

நல்லவேளை, தமிழர் தரப்பில் ஒரு நடிகர்கூட அரசியல்வாதியாக தெரிவாகி நாடாளுமன்றம் செல்லவில்லை. ஆனால் பல தமிழ் அரசியல்வாதிகள் வாழ்நாள் நடிகர்களாக எம் மத்தியில் உலா வருகின்றனர். சந்தர்ப்பம் வரும்போது அவர்களை சந்திப்போம்.

No comments