ஈபிடிபிக்கு எதிராக போராட்டம்!வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனநாயக போராட்டத்தை வன்முறையால் அழிக்க முடியாது, ஐ.நாவே அமைதி காக்கும் படையை உடனே அனுப்பு, அமெரிக்கா ஜரோப்பிய ஒன்றியம் இந்தியா போன்றவை ஓநாய்களிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க உடனே வர வேண்டும். தாக்கியவர்களை கடவுள் தண்டிப்பார் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

No comments