ஈராக்கிலுள்ள அமெரிக்க வான் படைத் தளங்கள் மீது ஈரானால் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் வசிக்கும் இரு விமான தளங்கள் மீது ஈரான் 22  பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியுள்ளது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் உயர்மட்ட தளபதி காசெம் சொலைமான் கொல்லப்பட்டதிற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

 ஈராக்கில் இர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள இரு தளங்கள் தாக்கப்பட்டதாகப் பென்டகன் கூறுகிறது.

 ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 "ஈராக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் எங்களுக்குத் தெரியும். ஜனாதிபதிக்கு விளக்கமளித்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தனது தேசிய பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசித்து வருகிறார்" என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி கிரிஷாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவல்படை சொலைமானியின் மரணத்திற்கு பதிலடி என்று கூறியது.

 "ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் தொடக்க புள்ளியாக இருக்கும் எந்தவொரு பிரதேசமும் குறிவைக்கப்படும் என்று பயங்கரவாத இராணுவத்திற்கு (அமெரிக்க) தங்கள் தளங்களை வழங்கிய அனைத்து அமெரிக்க நட்பு நாடுகளையும் நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று ஈரானின் அரச தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 01:45 மணி தொடக்கம் 02:15 மணி வரை 22 ஏவுகணைகளை ஈரான் ஏவுயுள்ளது. (22: 45-23: 15 GMT வியாழக்கிழமை), ஈராக் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கைக் கட்டளை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஆசாத் விமான தளத்தை நோக்கி பதினேழு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதில் இரண்டு ஹிட் நகருக்கு மேற்கே அருகிலுள்ள ஹிட்டன் பகுதியில் விழுந்து வெடிக்கவில்லை.

மற்றைய ஐந்து ஏவுகணைகளும் இர்பில் உள்ள சர்வதேச கூட்டுபடையணியின் தலைமையகத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

No comments