இராக்கிலிருந்து தனது படைகளை வெளியேற்றியது ஜெர்மன்!

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இராக்கிலிருந்து தனது படைகளை ஜெர்மனி திரும்பப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி ராணுவ அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில், “இராக் தலைநகர் பாக்தாத்தின் அருகே தஜி நகரில் உள்ள ராணுவத் தளத்திலிருந்த ஜெர்மனி ராணுவ வீரர்கள் குவைத் போன்ற வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். இராக்கிலிருந்து ஜெர்மனி ராணுவ வீரர்கள் தற்காலிகமாகவே திரும்பப் பெறப்பட்டுள்ளனர். மேலும் பயிற்சிகளுக்கு ராணுவ வீரர்கள் எப்போது வேண்டுமென்றாலும் இராக் திரும்புவார்கள். எல்லாவற்றையும் தாண்டி எங்கள் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மேலானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளதால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

No comments