பௌத்த சின்னத்தால் இனவாதம் ஏற்படுத்த முயற்சி

இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த சின்னங்கள் வைப்பதை சிறைச்சாலை திணைக்களம் செய்யாதிருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை துணைபோகும் பட்சத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை அமர்வுகளைப் புறக்கணித்து முழுமையான எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், யாழ் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு முன்பாக இரவோடு இரவாக பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் சிங்கள மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த சிலையை வைப்பதற்கு எதிராக இன்று காலை மக்கள், அரசியல்வாதிகள் என எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். எமது எதிர்ப்பினை அடுத்து தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைத் திணைக்களம் மீண்டும் பௌத்த சின்னங்களை வைக்க முனைந்தால் அது இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும். யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குள்ளேயே யாழ்ப்பாணம் சிறைச்சாலைத் திணைக்களம் அமைந்துள்ளது. எனவே யாழ்ப்பாணம் மாநகர சபை இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து இதனைத் தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இதைவிடுத்து, யாழ்ப்பாண மாநகர சபை சிலை வைப்பதற்கு துணைபோகுமானால் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சபையை புறக்கணித்து சபைக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தடையை மீறி பௌத்த சின்னங்கள் அங்கே நிறுவப்படுமாயின்  தொடர் போராட்டங்களில் ஈடுபட சபை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே அழைப்பு விடுக்கின்றேன்.
மேலும் வடக்கில் பௌத்த சின்னங்கள் படிப்படியாக புதிதாக முளைத்து வருகின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சினை மீண்டும் தொடருமாயின் மாபெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும். அதற்கு இங்குள்ள வர்த்தக சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments