காரால் மூண்ட குழப்பம்

குத்தகைக்கு வழங்கப்பட்ட வாகனத்தை மீட்கவந்த நிதி நிறுவன ஊழியர்களால் வவுனியா தர்மலிங்கம் வீதியில் குழப்ப நிலை இன்று ஏற்பட்டது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் கிராம சேவகர் ஒருவர் குத்தகை முறையில் கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் காரிற்கான வாடகைப் பணம் சில மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால்  காரை மீட்டுச் செல்வதற்காக குறித்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற வாகனத்தினை மீட்கும் ஊழியர்கள் குறித்த காரினை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தமையால் இந்த குழப்பமான நிலை வவுனியா தர்மலிங்கம் வீதியில் இன்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காரின் தற்காலிக உரிமையாளரான கிராம சேவையாளர், “தனது காரை விலைக்கு வாங்கும் நோக்குடன் நேற்று சிலர் வந்து அதனை செலுத்திப் பார்க்கக் கேட்டனர். தான் அதனை செலுத்திப் பார்க்க அனுமதித்த நிலையில் அவர்கள் காரை வவுனியா நகர் பகுதிவரை கொண்டு சென்றனர். அதன்பின்னர் தாம் நிதி நிறுவனம் என்று தெரிவித்து காரை தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.
நான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் வாடகைப் பணத்தில் ஒரு தொகையை நேற்று செலுத்தியதுடன் மிகுதிப் பணம் வரும் நாட்களில் செலுத்தவிருந்த நிலையில் அதனை மீட்க வந்தனர்” என்று தெரிவித்தார்.
எனினும் நிதி நிறுவன ஊழியர்களும் விடாப்பிடியாக நின்ற நிலையில் காரின் தற்காலிக உரிமையாளரான கிராமசேவகரும் காரை விட்டு இறங்காமல் உள்ளேயே இருந்தார். இதானால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இரு தரப்புடனும் கலந்துரையாடி, காரை அதன் தற்போதைய உரிமையாளரான கிராம சேவகரையே எடுத்துச்செல்லும் படி பணித்திருந்தனர். பின்னர் நிலமை சுமூகமானது.

No comments