வேட்டையன் படத்தை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்

மட்டக்களப்பில் வெளியாகவுள்ள முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் என்று இயக்குனர் நா.விஸ்ணுஜன் கோரியுள்ளார்.

மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று (13)  மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது இயக்குனர் விஸ்ணுஜன் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இந்த முழு நீள திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். இந்த திரைப்படத்தினை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.30க்கு கல்லடி சாந்தி திரையரங்கில் வெளியிடவுள்ளோம்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக நோர்வேயினை சேர்ந்த பரணிதரன் என்பவர் இருக்கின்றார். அவரின் சிறிய வயது ஆசையினை எங்களுடன் இணைந்து இன்று நிறைவு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படப்பிடிப்பின் தொழில்நுட்பம், இசையமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளேயே செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களைக் கொண்டதாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு தற்போதைய காலத்தில் பெண்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகளினால் எதிர்நோக்கும் பிரச்சினையை பேசுவதாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முழுநேர வேட்டையன் திரைப்படத்திற்கு வடகிழக்கு உட்பட புலம்பெயர் தமிழர்கள் தமது ஆதரவினை வழங்கவேண்டும் - என்றார்.

No comments