தற்பாதுகாப்பில் ராஜித?


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன,  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) முற்பகல் முன்னிலையானார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில், முன் பிணை கோரி மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார்.
குறித்த பிணை மனு மீதான வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதாக தனது மனுவில் ராஜித குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை, மீட்டெடுப்பதற்கு ஆகக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, “ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக, இதயசுத்தியுடன் சம்பிக்க செயற்பட்டார்” என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்காக ஒத்துழைத்த, கட்சியின் ஆதரவாளர்களுக்கு நன்றிதெரிவிக்கும் கூட்டம், அகலவத்தையில், ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று (19) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
“ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார்படுத்தப்பட்ட ஆரம்பக்காலத்தில், சின்ன, சின்ன கருத்து முரண்பாடுகள் இருந்தன. எனினும், ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக அவர், இதயசுத்தியுடன் செயற்பாட்டார்.
அவர் கைதுசெய்யப்படும் போது, நீதிமன்றத்தில் அனுமதித்தபோதும் அவ்விடங்களில் நானிருந்தேன். அவரை விடுவிப்பதற்கு, ஆகக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்றார்.

No comments